ஜனவரி முதல் உயருகிறது ஏ.டி.எம். சேவை கட்டணம்: வாடிக்கையாளர்கள் அதிர்ச்சி

டெல்லி: வங்கி வாடிக்கையாளருக்கான ஏ.டி.எம். சேவை கட்டணம் வரும் ஜனவரி 1ம் தேதி முதல் உயர்கிறது. ஏ.டி.எம்.களில் நிர்ணயிக்கப்பட்டுள்ள இலவச பரிவர்த்தனைகளை தாண்டி மேற்கொள்ளப்படும் ஒவ்வொரு பரிவர்த்தனைக்கும் தலா 25 ரூபாய் கட்டணம் வசூலிக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. வங்கி வாடிக்கையாளர்களை தற்போது தங்கள் வங்கி ஏ.டி.எம்.களில் ஒரு மாதத்திற்கு 5 முறை கட்டணமின்றி பணம் எடுக்கலாம். பிற வங்கி ஏ.டி.எம்.கள் என்றால் மாநகரங்களில் 3 முறை கட்டணமின்றி பயன்படுத்தலாம். ஊரக பகுதி என்றால் 5 முறை கட்டணம் கிடையாது.

அதன் பிறகு பணம் எடுத்தாலோ, இருப்பை பரிசோதித்தாலோ ஒரு பரிவர்த்தனைக்கு கட்டணமாக ஜி.எஸ்.டி.யுடன் சேர்த்து 23 ரூபாய் 60 காசு பிடித்தம் செய்யப்பட்டு வருகிறது. இந்த கட்டணத்தை வருகின்ற ஜனவரி 1ம் தேதி முதல் உயர்த்திக்கொள்ள வங்கிகளுக்கு மத்திய ரிசர்வ் வங்கி அனுமதி வழங்கியுள்ளது. அதன்படி மாதாந்திர இலவச பரிவர்த்தனைகளை தாண்டி ஏ.டி.எம்.களை பயன்படுத்துவதற்கான கட்டணம் ஜி.எஸ்.டி.யுடன் சேர்த்து 25 ரூபாயாக அதிகரிக்கப்பட்டுள்ளது. அதிக பரிமாற்றக் கட்டணத்தை வங்கிகளுக்கு ஈடுகட்டவும், செலவுகள் அதிகரித்திருப்பதாலும் பரிவர்த்தனை  கட்டணத்தை உயர்த்திக்கொள்ள அனுமதித்ததாக ஆர்.பி.ஐ. தெரிவித்துள்ளது. 

Related Stories: