ஜெட் வேகத்தில் பரவும் ஒமிக்ரான் கொல்லுயிரி!: அமெரிக்காவில் பாதிப்பு எண்ணிக்கை 8ஆக உயர்வு...பீதியில் மக்கள்..!!

வாஷிங்டன்: அமெரிக்காவில் 2 மாநிலங்களில் ஒமிக்ரான் தொற்று கண்டறியப்பட்ட நிலையில் தற்போது நியூயார்க்கிலும் 5 பேருக்கு பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. தென் ஆப்பிரிக்காவில் கண்டறியப்பட்ட உருமாற்றம் அடைந்த ஒமிக்ரான் வகை கொரோனா கிருமி, இதுவரை 30 நாடுகளுக்கு பரவியிருக்கிறது. அமெரிக்காவில் நேற்று வரை கலிபோர்னியா, கொலராடோ, மினிசோட்டா ஆகிய மாநிலங்களில் தலா ஒருவருக்கு தொற்று உறுதி செய்யப்பட்ட நிலையில், தற்போது நியூயார்க்கிற்கும் ஒமிக்ரான் பரவியிருக்கிறது. நியூயார்க்கில் 5 பேருக்கு ஒமிக்ரான் கிருமி தொற்று ஏற்பட்டிருப்பதாக அந்நாட்டு சுகாதாரத்துறை தெரிவித்திருக்கிறது.

இதனால் அமெரிக்காவில் உருமாறிய ஒமிக்ரான் கிருமி தொற்றுக்கு இலக்கானவர்களின் எண்ணிக்கை 8 ஆக அதிகரித்துள்ளது. இதையடுத்து பாதிக்கப்பட்ட 8 பேரிடம் தொடர்பில் இருந்தவர்களை கண்டறிந்து ஒமிக்ரான் பாதிப்பு உள்ளதா என்று மரபணு ஒப்பிட்டு சோதனை நடத்தப்பட்டு வருகிறது. ஒமிக்ரான் உறுதி செய்யப்பட்டிருக்கும் அனைவருக்கும் அறிகுறிகள் சிறிய அளவில் இருப்பதால் பொதுமக்கள் பீதியடைய வேண்டாம் என்று ஜோ பைடன் அரசு தெரிவித்திருக்கிறது.

இதனிடையே கடந்த சில நாட்களாக அமெரிக்காவில் தினசரி கொரோனா தொற்றின் விகிதம் அதிகரித்து வருவதற்கு ஒமிக்ரான் கிருமி காரணமா? என்று அமெரிக்க விஞ்ஞானிகள் ஆய்வு செய்து வருகின்றனர். நேற்று ஒருநாளில் மட்டும் அமெரிக்காவில் 1 லட்சத்து 30 ஆயிரத்திற்கும் மேற்பட்டோருக்கு கொரோனா தொற்று உறுதியாகியுள்ளது. சிகிச்சை பலனின்றி 24 மணி நேரத்தில் 1,264 பேர் உயிரிழந்திருப்பதாக சுகாதாரத்துறை தெரிவித்திருப்பது குறிப்பிடத்தக்கது.

Related Stories: