எடப்பாடி பிஏ மீது நிலமோசடி புகார்

ஓமலூர்: காடையாம்பட்டி அருகே, நிலமோசடி செய்து அடியாட்களை வைத்து மிரட்டுவதாக, எடப்பாடி பழனிசாமியின் உதவியாளர் மணி மீது, ஓமலூர் டிஎஸ்பியிடம் விவசாயி புகார் மனு அளித்துள்ளார். சேலம் மாவட்டம், காடையாம்பட்டி அருகே நடுப்பட்டியை சேர்ந்தவர் மணி(52). இவர் கடந்த 10ஆண்டுகளாக, முன்னாள் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமியின் உதவியாளராக இருந்தார். அப்போது, பல்வேறு நபர்களிடம் அரசு வேலை வாங்கி தருவதாகவும், பணியிட மாற்றம் வாங்கி தருவதாகவும் கூறி, கோடிக்கணக்கில் பணம் பெற்று ஏமாற்றியதாக புகார்கள் எழுந்தது. இது தொடர்பாக மணியை தனிப்படை போலீசார் கைது செய்து, திருச்சி மத்திய சிறையில் அடைத்துள்ளனர்.

இந்நிலையில், காடையாம்பட்டி அருகே கூகுட்டப்பட்டி கிராமம், கள்ளிக்காடு பகுதியை சேர்ந்த விவசாயி ராஜேந்திரன் என்பவர், ஓமலூர் டிஎஸ்பி சங்கீதாவிடம், நேற்று புகார் மனு ஒன்றை கொடுத்துள்ளார். அந்த மனுவில் கூறியிருப்பதாவது: எனது பூர்வீக நிலத்தில் நான் வீடு கட்டி வசித்து வந்தேன். குடும்ப சூழ்நிலை காரணமாக, தனியார் நிதி நிறுவனத்திடம் அதை அடமானம் வைத்து, கடன் வாங்கி இருந்தேன். இதை எடப்பாடி பழனிசாமியின் உதவியாளர் மணி, மோசடியாக கிரையம் செய்து உள்ளார். இதுகுறித்து, அவர் மீது ஓமலூர் நீதிமன்றத்தில் வழக்கும் உள்ளது. நேற்று முன்தினம் சிறையில் இருந்து கொண்டே அவர் அனுப்பிய அடியாட்கள், வழக்கு உள்ள நிலத்திற்கு மின் இணைப்பு பெறுவதற்காக கம்பம் நடுவதற்கு வந்தனர். இதை நான் தடுத்து நிறுத்தியதால், அவர்கள் கொலை மிரட்டல் விடுக்கின்றனர். எனவே, எனக்கும், குடும்பத்தினருக்கும் பாதுகாப்பு வழங்க வேண்டும். இவ்வாறு மனுவில் கூறியுள்ளார். இது குறித்து போலீசார் விசாரித்து வருகின்றனர்.

Related Stories: