கூடங்குளம், கல்பாக்கத்தில் இருந்து தமிழகத்துக்கு மின் ஒதுக்கீடு எவ்வளவு? ராஜேஷ்குமார் எம்பி கேள்விக்கு ஒன்றிய இணைஅமைச்சர் பதில்

சென்னை: கூடங்குளம், கல்பாக்கத்தில் இருந்து தமிழக ஒதுக்கீடாக வழங்கப்படும் மின்சார அளவு எவ்வளவு என்பது குறித்து ஒன்றிய இணை அமைச்சர் ஜிதேந்தர்சிங் பதில் அளித்தார். திமுக மாநிலங்களவை உறுப்பினர் ராஜேஷ்குமார் நாடாளுமன்றத்தில் கேள்வி எழுப்பி பேசினார். அவர் கூறியதாவது: கூடங்குளத்தில் ரூ.39,849 கோடி மதிப்பில் 3வது மற்றும் 4வது அணு உலை பணிகள் 2023ம் ஆண்டிற்குள் முடிவடைந்து விடும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. ஆனால் 2020-21ம் ஆண்டில் 6700 கோடி நிதி மட்டுமே ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. இதே போல் ரூ.5677 கோடி மதிப்பில் கல்பாக்கத்தில் அமைக்கப்பட்டு வரும்  500 மெகாவாட் மின்உற்பத்தி நிலையம் அடுத்த ஆண்டுக்குள் முடிக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டது.

ஆனால் அந்த திட்டத்திற்கு 2020-21ம் நிதியாண்டில் ரூ.70 கோடி மட்டுமே நிதி ஒதுக்கப்பட்டுள்ளது.தமிழ்நாட்டில்  நடக்கும் மிக முக்கிய பணிகளுக்கு இவ்வளவு குறைவாக நிதி ஒதுக்க என்ன காரணம்? இந்த திட்டங்களுக்கு கூடுதல் நிதி ஒதுக்கி  குறிப்பிட்ட காலத்திற்குள் முடிக்கப்படுமா?. இதுதவிர கூடங்குளம், கல்பாக்கத்தில் இருந்து தமிழ்நாட்டிற்கு கடந்த 3 ஆண்டுகளில் வழங்கப்பட்ட மின்சாரம் எவ்வளவு? இவ்வாறு அவர் கேள்வி எழுப்பினார். அவரது கேள்விக்கு ஒன்றிய இணை அமைச்சர் ஜிதேந்திரசிங் அளித்த பதில் வருமாறு; கூடன்குளம் அணுமின்நிலையத்தில் உள்ள முதல் உலையில் 2018 முதல் 2021 வரை 18.273.26 மில்லியன் யூனிட் மின்சாரமும், 2வது உலையில் 12,365 மில்லியன் யூனிட் மின்சாரமும், கல்பாக்கத்தில் 4245.39 மில்லியன் யூனிட் மின்சாரமும் உற்பத்தி செய்யப்பட்டுள்ளது. இதில் தமிழ்நாட்டிற்கு முதல் உலையில் இருந்து 10,463.43 மில்லியன் யூனிட் மின்சாரமும், 2வது உலையில் இருந்து 9351.35 மில்லியன் யூனிட் மின்சாரமும், கல்பாக்கத்தில் இருந்து 3215.27 மில்லியன் யூனிட் மின்சாரமும் வழங்கப்பட்டுள்ளது. அடுத்த 6 மாதத்தில் 4ம் அலை அமைக்கும் பணி தொடங்கப்பட்டது. இந்த நிதி ஆண்டிற்குள் 5 மற்றும் 6வது அணுஉலை அமைக்கும் பணி அங்கு தொடங்கப்படும். இவ்வாறு அவர் கூறினார்.

Related Stories:

More