செயற்குழுவில் விதிகள் திருத்தப்பட்ட சூட்டோடு ஓபிஎஸ்- இபிஎஸ் வகிக்கும் பதவிக்கு வரும் 7ம் தேதி தேர்தல்: 13 முதல் 23 வரை நிர்வாகிகள் தேர்தல் நடக்கும்: அதிமுக தலைமை கழகம் அறிவிப்பு

சென்னை: ஓ.பன்னீர்செல்வம், எடப்பாடி பழனிசாமிக்கு இடையேயான மோதல் முடிவுக்கு வந்துள்ள நிலையில், அவர்கள் வகிக்கும் ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளர் பதவிக்கு வருகிற 7ம் தேதி தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ளது. அதேபோல, 13ம் தேதி முதல் 23ம் தேதி வரை நிர்வாகிகளுக்கான தேர்தல் நடைபெறும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது. அதிமுகவின் ஒருங்கிணைப்பாளராக ஓ.பன்னீர்செல்வம், இணை ஒருங்கிணைப்பாளராக எடப்பாடி பழனிசாமி இணைந்து கட்சியை வழிநடத்தி வருகிறார்கள். அதேநேரம், தமிழக அரசின் எதிர்க்கட்சி தலைவராக எடப்பாடி பழனிசாமியும், துணை தலைவராக  ஓ.பன்னீர்செல்வமும் இருக்கின்றனர். இந்நிலையில், ஓ.பன்னீர்செல்வத்தை ஒருங்கிணைப்பாளர் பதவியில் இருந்து நீக்கிவிட்டு கட்சியின் பொதுச் செயலாளராக வேண்டும் என்று எடப்பாடி பழனிசாமியும் அவரது ஆதரவாளர்களும் தீவிரமாக வேலை செய்தனர். எடப்பாடிக்கு எம்எல்ஏக்கள் மற்றும் மாவட்ட செயலாளர்களின் ஆதரவும் இருந்தது. இதனால் தனது ஆதரவாளர்களுடன் கட்சியின் பொதுக் குழுவை கூட்டி முடிவு எடுப்பது. ஓ.பன்னீர்செல்வத்துக்கு அவைத் தலைவர் அல்லது பொருளாளர் பதவி கொடுப்பது. அதை ஏற்காவிட்டால் கட்சியில் இருந்து நீக்குவது என்று முடிவு செய்யப்பட்டு வேலைகள் மும்முரமாக நடந்தன.

இதனால் சுதாரித்துக் கொண்ட ஓ.பன்னீர்செல்வம், சசிகலாவுக்கு ஆதரவு தெரிவிப்பதுபோல கருத்துகளை வெளியிட்டார். இதற்கு ஒரு குறிப்பிட்ட சமூக எம்எல்ஏக்கள், மாவட்ட செயலாளர்கள் ஆதரவு தெரிவித்தனர். மேலும், கொங்கு மண்டலத்தில் உள்ள செங்கோட்டையன் உள்ளிட்ட சில தலைவர்களும் ஆதரவு தெரிவித்தனர். இதன்மூலம் ஓபிஎஸ்சின் கை கட்சியில் கொஞ்சம் ஓங்கத் தொடங்கியது. இதனால், மாவட்டச் செயலாளர்கள் கூட்டத்தில் இதுபற்றி பேசி முடிவு எடுக்கலாம் என இருவரும் தனித்தனி திட்டங்களை வகுத்திருந்தனர். அதன்படி கடந்த வாரம் மாவட்ட செயலாளர்கள் கூட்டமும் நடந்தது. ஆனால், முன்னாள் அமைச்சர்கள் அன்வர் ராஜா, செங்கோட்டையின் திடீரென புதுப்புது தாக்குதல் தொடுத்ததும் இருவருமே அதிர்ந்துவிட்டனர். தற்போதுள்ள ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளர் பதவியிலேயே நீடிக்க முடிவு செய்தனர். இந்தநிலையில்தான் நேற்று முன்தினம் நடந்த கட்சியின் செயற்குழு கூட்டத்தில் பொதுக்குழு மூலம் தேர்வு செய்யப்படும் பொதுச் செயலாளர் பதவியை தவிர்த்து, ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளரை, கட்சியின் அடிப்படை உறுப்பினர்கள் நேரடி தேர்தல் மூலமாக தேர்வு செய்வது என்று முடிவு செய்யப்பட்டு, அறிவிக்கப்பட்டது. இதற்காக கட்சியின் சட்ட விதிகளிலும் திருத்தம் செய்யப்பட்டது. இதன்மூலம் எடப்பாடி பழனிசாமியின் பொதுச் செயலாளர் கனவு தகர்ந்தது. விதிகள் திருத்தப்பட்ட சூட்டோடு, ஒரே நாளில், கட்சியின் ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளர் மற்றும் நிர்வாகிகள் தேர்தலுக்கான அறிவிப்பை தலைமை கழகம் அதிரடியாக நேற்று வெளியிட்டுள்ளது.

இதுகுறித்து அதிமுக தலைமை கழகம் சார்பில் நேற்று வெளியிடப்பட்டுள்ள அறிக்கை: அதிமுக சட்ட திட்ட விதி-30, பிரிவு-2ன்படி, ‘‘அதிமுக அமைப்புகளின் பொதுத்தேர்தல் 5 ஆண்டுகளுக்கு ஒருமுறை நடத்திட வேண்டும்” என்ற விதிமுறைக்கேற்ப, கழக ஒருங்கிணைப்பாளர், கழக இணை ஒருங்கிணைப்பாளர் தேர்தல் நடத்தப்பட உள்ளது.

இந்த பதவிகளுக்கு 3ம் தேதி (இன்று), 4ம் தேதி காலை 10 மணி முதல் பிற்பகல் 3 மணி வரை வேட்பு மனு தாக்கல் செய்யலாம். வேட்பு மனு பரிசீலனை 5ம் தேதி (ஞாயிறு) காலை 11.25 மணிக்கு நடைபெறும். வேட்பு மனு திரும்ப பெறுதல் 6ம் தேதி மாலை 4 மணி வரை. வருகிற 7ம் தேதி (செவ்வாய்) காலை 10 மணி முதல் மாலை 5 மணி வரை தேர்தல் நடைபெறும். வாக்கு எண்ணிக்கை 8ம் தேதி (புதன்) அன்று நடைபெறும். அன்றைய தினமே தேர்தல் முடிவு அறிவிக்கப்படும். தேர்தல் ஆணையர்களாக சி.பொன்னையன் (அமைப்பு செயலாளர்), பொள்ளாச்சி ஜெயராமன் (முன்னாள் அமைச்சர்) ஆகியோர் நியமிக்கப்பட்டுள்ளனர். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

இதைத்தொடர்ந்து அதிமுக அமைப்பு தேர்தல் நடைபெறுவது குறித்தும் ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம், இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமி ஆகியோர் அறிவித்துள்ளனர். இதுகுறித்து அவர்கள் வெளியிட்டுள்ள அறிக்கை: தமிழ்நாட்டில் உள்ள ஒன்றியங்களுக்கு உட்பட்ட கிளை கழக நிர்வாகிகள், பேரூராட்சி வார்டு கழக நிர்வாகிகள், நகர வார்டு கழக நிர்வாகிகள் மற்றும் மாநகராட்சி வட்ட கழக நிர்வாகிகள் ஆகிய பொறுப்புகளுக்கான கழக அமைப்பு தேர்தல்கள் இரண்டு கட்டங்களாக வருகிற 13ம் தேதி முதல் 23ம் தேதி வரை நடைபெற உள்ளது. அதன்படி, காஞ்சிபுரம், திருவள்ளூர் கிழக்கு, திருவள்ளூர் தெற்கு, திருவள்ளூர் வடக்கு, திருவள்ளூர் மத்தியம், திருவள்ளூர் மேற்கு, செங்கல்பட்டு கிழக்கு, செங்கல்பட்டு மேற்கு உள்ளிட்ட 35 மாவட்டங்களுக்கு வருகிற 13 மற்றும் 14ம் தேதி தேர்தல் நடைபெறும். 2வது கட்டமாக, வடசென்னை வடக்கு (கிழக்கு), வடசென்னை வடக்கு (மேற்கு), வடசென்னை தெற்கு (கிழக்கு), வடசென்னை தெற்கு (மேற்கு), சென்னை புறநகர், தென்சென்னை வடக்கு (கிழக்கு), தென்சென்னை வடக்கு (மேற்கு), தென்சென்னை தெற்கு (கிழக்கு), தென்சென்னை தெற்கு (மேற்கு) உள்ளிட்ட 40 மாவட்டங்களுக்கு வருகிற 22 மற்றும் 23ம் தேதி தேர்தல் நடைபெறும். மாவட்ட தேர்தல் பொறுப்பாளர்கள் தேர்தல்களை நடத்தி முடித்து, வெற்றி படிவம், ரசீது புத்தகம் மற்றும் விண்ணப்ப கட்டணம் முதலானவற்றை தேர்தல் முடிவுற்ற இரண்டு நாட்களுக்குள், சம்பந்தப்பட்ட தேர்தல் ஆணையாளர்களிடம் இருந்து பெற்று அதனை தலைமை கழகத்தில் ஒப்படைக்க வேண்டும். இவ்வாறு அவர்கள் கூறி உள்ளனர்.

இந்த தேர்தல் அறிவிப்பு மூலம் ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளர்களுக்கிடையிலான மோதல் தற்காலிகமாக முடிவுக்கு வந்துள்ளது. ஆனால் எந்த நேரத்திலும் எடப்பாடி பழனிச்சாமி, இணை ஒருங்கிணைப்பாளராக இருப்பதற்கு பதில், தனது ஆதரவாளர்கள் மூலம் ஒருங்கிணைப்பாளர் பதவியை பிடிக்கவும் திட்டமிடலாம் என்று கூறப்படுகிறது. எதிர்க்கட்சி தலைவர் பதவியைப் பிடித்ததுபோல இப்போதும் செயல்பட வாய்ப்பு உள்ளது. அவரது ரகசிய திட்டம் குறித்த முடிவு, இன்னும் ஓரிரு நாளில் தெரிந்து விடும் என்றும் கூறப்படுகிறது.

விருப்ப மனு கட்டணம் எவ்வளவு?

அதிமுகவில் நடைபெற உள்ள கிளை கழக நிர்வாகிகள், பேரூராட்சி வார்டு கழக நிர்வாகிகள், நகர வார்டு கழக நிர்வாகிகள் மற்றும் மாநகராட்சி வட்ட கழக நிர்வாகிகள் ஆகிய பொறுப்புகளுக்கு போட்டியிட விரும்புகிறவர்கள் விருப்ப மனு விண்ணப்ப கட்டணம் அறிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி, கிளை கழக அவைத்தலைவர், இணை செயலாளர், துணை செயலாளர்கள், பொருளார், மேலமைப்பு பிரதிநிதி பதவிக்கு கட்டணம் இல்லை.

கிளை கழக செயலாளர் - 250

பேரூராட்சி வார்டு கழக செயலாளர் - 300

பேரூராட்சி அவைத்தலைவர், இணை செயலாளர், துணை செயலாளர், பொருளாளர், மேலமைப்பு பிரதிநிதிகள் - 200

நகர வார்டு கழக செயலாளர் - 500

நகர அவைத்தலைவர், இணை செயலாளர், துணை செயலாளர்கள், பொருளாளர், மேலமைப்பு பிரதிநிதிகள் - 300

மாநகராட்சி வட்ட கழக செயலாளர் - 2,000

மாநகராட்சி அவைத்தலைவர், இணை செயலாளர், துணை செயலாளர்கள், பொருளாளர், மேலமைப்பு பிரதிநிதிகள் - 700

Related Stories: