நீர் நிலைகளில் ஆக்கிரமிப்பு குறித்து நாளைக்குள் விரிவான அறிக்கை: கலெக்டர்களுக்கு தலைமை செயலாளர் உத்தரவு

சென்னை: நீர் நிலைகளில் ஆக்கிரமிப்பு குறித்து நாளைக்குள் விரிவான அறிக்கை சமர்பிக்க மாவட்ட கலெக்டர்களுக்கு தலைமை செயலாளர் இறையன்பு உத்தரவிட்டுள்ளார். நீர்நிலைகளில் உள்ள ஆக்கிரமிப்புகள் தொடர்பாக அறப்போர் இயக்கம் வழக்கு தொடர்ந்தது. இந்த வழக்கு விசாரணையில், மாநிலம் முழுவதும் உள்ள நீர்நிலைகளில் ஆக்கிரமிப்புகளை அகற்ற நடவடிக்கை எடுக்கப்படும் என்று தமிழக அரசு உறுதியளித்துள்ளது.  இந்நிலையில்  தமிழகத்தில் உள்ள நீர்நிலைகளில் உள்ள ஆக்கிரமிப்புகளை கணக்கெடுப்பு செய்வது தொடர்பாக தலைமைச் செயலகத்தில் தலைமைச் செயலாளர் இறையன்பு தலைமையில் ஆலோசனை கூட்டம் நடந்தது.

இதில் அனைத்து மாவட்ட ஆட்சித் தலைவர்களும் காணொலி வாயிலாக கலந்து கொண்டனர். அப்போது வருவாய்த் துறை ஆவணங்களின் அடிப்படையில் அனைத்து மாவட்டங்களிலும் உள்ள நீர்நிலைகளின் விவரங்கள், அவற்றில் ஆக்கிரமிப்பு செய்யப்பட்டுள்ள விவரங்கள் ஆகியவற்றை கணக்கெடுப்பு செய்து விரிவான அறிக்கையை அனைத்து மாவட்ட ஆட்சித் தலைவர்களும் நீர்வளத்துறை வழங்கியுள்ள படிவங்களை பூர்த்தி செய்து, வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத் துறை செயலாளருக்கு நாளைக்குள் (4ம் தேதி) அனுப்பி வைக்க வேண்டும் என தலைமைச் செயலாளர் அறிவுறுத்தினார்.

மேலும் வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத் துறை முதன்மைச் செயலாளர் பற்றாளராகச் செயல்பட்டு மாவட்ட ஆட்சியர்களிடமிருந்து அறிக்கைகளை பெற்று நீதிமன்றத்தில் வருகிற 7ம் தேதிக்குள் அறிக்கையாக தாக்கல் செய்ய வேண்டும்.  இதற்காக மாவட்ட ஆட்சியர்கள், இரவு பகலாக செயல்பட்டு விவரங்களை பெற வேண்டும். மாவட்ட ஆட்சியர்கள் நீர்நிலைகளின் வரைபடங்களை தயார் செய்து ஆக்கிரமிப்புகளின் விவரங்களை நாளைக்குள் (4ம் தேதி) அனுப்ப வேண்டும். நீர்நிலைகளில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்றிய விவரம் மற்றும் ஆக்கிரமிப்புகளை அகற்ற நீதிமன்றங்கள் பிறப்பித்த தடையாணை குறித்த விவரங்களை மாவட்ட ஆட்சியர்கள் தங்களது அறிக்கைகளில் அளிக்க வேண்டும். மேலும், மாவட்ட ஆட்சியர்கள் ஆக்கிரமிப்பாளர்களுக்கு மாற்று குடியிருப்பு வழங்குவது குறித்த பட்டியலை அளிக்க வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

சென்னை உள்பட 4 மாவட்டங்களில் 48 ஆயிரம் ஆக்கிரமிப்பு கணக்கெடுப்பு

சென்னை, காஞ்சிபுரம், செங்கல்பட்டு, திருவள்ளூர் ஆகிய 4 மாவட்டங்களில்  உள்ள ஆக்கிரமிப்புகளை  சென்னை மண்டல நீர்வளத்துறை தலைமை பொறியாளர் முரளிதரன், கண்காணிப்பு பொறியாளர் முத்தையா மற்றும் வருவாய்த்துறை அதிகாரிகள் அடங்கிய குழுவினர் கணக்கெடுக்கும் பணி மேற்கொண்டனர். அதன்படி சென்னை மாவட்டத்தில் 10914 ஆக்கிரமிப்புகள், செங்கல்பட்டு மாவட்டத்தில் 17227ம், காஞ்சிபுரம் மாவட்டத்தில் 5726ம், திருவள்ளூர் மாவட்டத்தில் 14,282 என மொத்தம் 48,149 ஆக்கிரமிப்புகள் கண்டறியப்பட்டுள்ளன. சென்னையில் அதிகபட்ச ஆட்சேபனைக்குரியதாக 10914ம், செங்கல்பட்டில் 16, 101ம், காஞ்சிபுரத்தில் 3727ம், திருவள்ளூரில் 6654 என மொத்தம் 48,149 ஆக்கிரமிப்புகள் இருப்பதாக கண்டறியப்பட்டுள்ளது என்று நீர்வளத்துறை அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.

Related Stories: