சென்னையில் ஒமிக்ரான் பாதிப்புக்கு தனிமைப்படுத்த அரசு மருத்துவமனைகளில் 275 படுக்கைகள் தயார்: மருத்துவர்கள் தகவல்

சென்னை: ஒமிக்ரான் வைரஸ் தொற்று பாதிப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக சென்னையில் உள்ள அரசு மருத்துவமனைகளில் 275 படுக்கைகள் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளதாக மருத்துவர்கள் தெரிவித்தனர். கொரோனாவில் இருந்து உருமாற்றமடைந்த ஒமிக்ரான் வைரஸ் தொற்று தென் ஆப்பிரிக்காவில் தோன்றி பிற நாடுகளிலும் பரவி வருகிறது. புதிதாக உருவெடுத்துள்ள ஒமிக்ரான் வைரஸ் உலக நாடுகளை அச்சுறுத்தி வருகிறது. வழக்கமான கொரோனா தொற்றைக் காட்டிலும் 5 மடங்கு வேகமாக பரவக் கூடியதாகவும், வீரியமிக்கதாகவும் ஒமிக்ரான் வைரஸ் கருதப்படுகிறது. இதனால் இந்தியா மற்றும் தமிழகத்திலும் தொற்று பாதிப்பு பரவாமல் தடுப்பதற்கான அனைத்து ஏற்பாடுகளையும் மத்திய, மாநில அரசுகள் மேற்கொண்டு வருகின்றன.

வெளிநாடுகளில் இருந்து வருவோரை விமான நிலையத்திலேயே பரிசோதித்து தனிமைப்படுத்தும் நடவடிக்கைகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன. மற்றொருபுறம் மாநிலத்துக்குள்ளும் மருத்துவக் கண்காணிப்பு தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. தமிழகத்தில் ஒமிக்ரானை எதிர்கொள்ள தேவையாக இருக்கும் முக்கிய மருந்துகள், ஆக்சிஜன் வசதிகள், முகக்கவசங்கள் போன்றவை அடுத்த 3 மாதங்களுக்கு தேவையான அளவு கையிருப்பு உள்ளதாக மக்கள் நல்வாழ்வுத்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இந்நிலையில் தமிழகத்தில் ஒமிக்ரான் வைரஸ் தொற்று பரவினால் அதனை எதிர்கொள்ள பல்வேறு கட்ட முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை தமிழக அரசு மேற்கொண்டு வருகிறது.

அதன்படி, வைரஸ் தொற்று பாதிப்புக்குள்ளாகும் நபர்களை தனிமைப்படுத்தி கண்காணிக்கும் வகையில் தமிழகத்தில் உள்ள அனைத்து அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைகளிலும் 150 படுக்கைகள் ஒதுக்க மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அறிவுறுத்தி உள்ளது. அதன்படி சென்னை ராஜிவ் காந்தி அரசு பொது மருத்துவமனையில் ஒமிக்ரான் வைரஸ் தொற்று முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக 4வது தளத்தில் முதற்கட்டமாக 150 படுக்கைகள் தயார் செய்து ஒதுக்கப்பட்டுள்ளது. ஸ்டான்லி அரசு மருத்துவமனையில் 75 படுக்கைகளும், ஓமந்தூரார் அரசு மருத்துவமனையில் 15 ஐ.சி.யூ படுக்கைகள், 35 பொது படுக்கைகள் என மொத்தமாக 275 படுக்கைகள் ஒமிக்ரான் வைரஸ் தொற்றுக்கு தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளது. கிண்டி கொரோனா மருத்துவமனை, கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனைகளில் பல கொரோனா படுக்கைகள் காலியாக கிடப்பதால், தேவைப்படும் நேரத்தில் அவற்றை ஒமிக்ரான் தொற்றுக்கு சிகிச்சை அளிக்க பயன்படுத்திக்கொள்ள ஏற்பாடு செய்யப்படும்.

மேலும் ஒமிக்ரான் வைரஸ் வீரியமிக்கதாக இருக்கும் என தெரிவிக்கப்படுவதால், ஒமிக்ரான் தொற்றால் பாதிக்கப்படும் நபர்களை பல்வேறு மருத்துவமனைகளில் வைத்து சிகிச்சை அளிப்பதை காட்டிலும், பாதிக்கப்படும் நபர்கள் அனைவரையும் ஒரே இடத்தில் அனுமதித்து சிகிச்சை அளித்தால் தொற்று பரவுதல் தடுக்கப்படும் என டாக்டர்கள் தெரிவித்துள்ளனர்.

Related Stories: