அனைத்து கிராம அண்ணா மறுமலர்ச்சி திட்டத்தில் 1,200 கோடியில் 2,505 கிராம ஊராட்சியில் அடிப்படை வசதிகள்: விரைந்து செயல்படுத்த அமைச்சர் பெரியகருப்பன் உத்தரவு

சென்னை: அனைத்து கிராம அண்ணா மறுமலர்ச்சி திட்டத்தில் ரூ.1,200 கோடியில் 2,505  கிராம ஊராட்சியில் அடிப்படை வசதி திட்டத்தை விரைவாக  செயல்படுத்த அதிகாரிகளுக்கு அமைச்சர் பெரியகருப்பன் உத்தரவிட்டுள்ளார். ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சி துறையின் மாநில அளவிலான ஆய்வுக்கூட்டம் சென்னையில் ஊரக வளர்ச்சி துறை அமைச்சர் கே.ஆர்.பெரியகருப்பன் தலைமையில் நடந்தது. இதில் ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சி துறை முதன்மை செயலாளர் அமுதா, இயக்குநர் பிரவீன் நாயர், கூடுதல் இயக்குநர்கள், அதிகாரிகள் கலந்து கொண்டனர். கூட்டத்தில் அமைச்சர் பெரியகருப்பன் பேசியதாவது:

தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை காலத்தில் பெய்த மழைநீரை ஊரக பகுதிகளின் நீர் ஆதாரங்களான குளங்கள், ஏரிகள் மற்றும் கால்வாய்களை சீரமைத்து பாதுகாத்திட வேண்டும்.

ஊரக பகுதிகளின் அடிப்படை வசதிகளான குடிநீர், தெரு விளக்குகள், சாலைகள், பள்ளி கட்டிடங்கள் உள்ளிட்ட உட்கட்டமைப்புகளை ஏற்படுத்துவது, ஊரக மக்களுக்கான வேலைவாய்ப்புகளுக்கு உத்தரவாதம் அளிக்கும் பணிகளை மேற்கொள்ளுதல், சுற்றுப்புற தூய்மையை பராமரித்தல், தனிநபர் சுகாதாரம் பேணுதல் போன்ற பணிகளை தரமாகவும், விரைவாகவும்  முடிக்க வேண்டும். 2021-22 முதல் 2025-26 வரையான 5 ஆண்டுகளில் கிராமங்களை முழுமையான வளர்ச்சி அடைந்த கிராமங்களாக மாற்றுவதற்கு தேவையான அடிப்படை வசதிகளை படிப்படியாக ஏற்படுத்திட உருவாக்கப்பட்டுள்ள அனைத்து கிராம அண்ணா மறுமலர்ச்சி திட்டம்-II நடப்பாண்டில் ரூ.1200 கோடி மதிப்பீட்டில், 2505 கிராம ஊராட்சிகளில் செயல்படுத்தப்பட உள்ளது. இத்திட்டத்தை செயல்படுத்துவதற்கான பூர்வாங்க பணிகளை மாவட்ட அளவிலான அலுவலர்கள் விரைந்து மேற்கொள்ள வேண்டும்.

மகாத்மா காந்தி ஊரக வேலை உறுதி திட்டத்தில் அனைத்து ஊராட்சிகளிலும் தனிநபர் அல்லது சமுதாய பணிகள் எடுக்கப்பட்டு தொடர்ச்சியாக மக்களுக்கு பணிகள் வழங்க அறிவுறுத்தப்பட்டது. இத்திட்டத்தின் கீழ் மேற்கொள்ளப்படும் அனைத்து பொருட்கூறு பணிகளும் விரைந்து செயல்படுத்தப்பட வேண்டும். பிரதம மந்திரி கிராம குடியிருப்பு திட்டத்தில் கட்டப்பட்டு வரும் அனைத்து வீடுகளையும் விரைந்து முடிக்க வேண்டும்.  மேலும், பிரதம மந்திரி கிராம சாலைகள் திட்டம், ஜல் ஜீவன் மிஷன், தூய்மை பாரத இயக்கம், திட மற்றும் திரவக்கழிவு மேலாண்மை திட்டம், நாடாளுமன்ற உறுப்பினர் உள்ளூர் பகுதி மேம்பாட்டு திட்டம், ரூர்பன் போன்ற திட்டங்களில் எடுக்கப்பட்டு முன்னேற்றத்திலுள்ள அனைத்து பணிகளையும் இந்த நிதியாண்டு இறுதிக்குள் முடித்திட வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.

Related Stories: