2014, 2015, 2016ம் ஆண்டுகளில் வேலைவாய்ப்பு பதிவு புதுப்பிக்க தவறியவர்களுக்கு சிறப்பு சலுகை: தமிழக அரசு அறிவிப்பு: 48 லட்சம் பேர் பயன்பெறுவர்

சென்னை: வேலைவாய்ப்பை புதுப்பிக்க தவறியவர்களுக்கு 3 மாதம் சிறப்பு புதுப்பித்தல் சலுகையை அரசு வழங்கியுள்ளது. தமிழக அரசின் தொழிலாளர் நலன் மற்றும் திறன்மேம்பாட்டு துறை செயலாளர் கிர்லோஷ் குமார் வெளியிட்டுள்ள அரசாணையில்  கூறியிருப்பதாவது: 2021-22ம் ஆண்டுக்கான தொழிலாளர் நலன் மற்றும் திறன் மேம்பாட்டுத்துறை மானியக்கோரிக்கையின் மீதான விவாதத்திற்கு பின்னர், தொழிலாளர் நலன் மற்றும் திறன் மேம்பாட்டுத்துறை அமைச்சர் சி.வி.கணேசன் கடந்த 4.9.2021 அன்று சட்டமன்றப் பேரவையில், வேலைவாய்ப்பு அலுவலகங்களில் பதிவு செய்து, தங்கள் பதிவை 2014, 2015 மற்றும் 2016 ஆகிய ஆண்டுகளில் புதுப்பிக்க தவறிய சுமார் 48 லட்சம் பதிவுதாரர்கள் பயன்பெறும் வகையில் சிறப்பு புதுப்பித்தல் சலுகை வழங்கப்படும்.

2017, 2018 மற்றும் 2019 ஆகிய ஆண்டுகளில் தங்களது வேலைவாய்ப்பு அலுவலக பதிவை புதுப்பிக்க தவறிய பதிவுதாரர்களுக்கு, ஏற்கனவே 3 மாத கால அவகாசம் வழங்கப்பட்டது. இக்கால அவகாசத்தை நீட்டிக்க வேண்டும் என்ற கோரிக்கைகளை ஏற்று புதுப்பித்தல் சலுகை மேலும் மூன்று மாதங்களுக்கு நீட்டித்து வழங்கப்படும்” என்று அறிவித்தார். இதை தொடர்ந்து வேலைவாய்ப்பு மற்றும் பயிற்சித்துறை இயக்குனர் 3 மாதங்களுக்கு சிறப்பு சலுகை வழங்கி ஆணையிடுமாறு அரசை கேட்டுக்கொண்டார்.  அரசு இதை ஆய்வு செய்து, தமிழ்நாட்டில் உள்ள மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில் நெறி வழிகாட்டு மையங்களில் 2014, 2015, மற்றும் 2016 ஆகிய ஆண்டுகளில் வேலைவாய்ப்புக்கான பதிவை புதுப்பிக்க தவறிய பதிவுதாரர்களுக்கு சிறப்பு புதுப்பித்தல் சலுகை மற்றும் 2017, 2018, மற்றும் 2019 ஆகிய ஆண்டுகளில் வேலைவாய்ப்புக்கான பதிவை புதுப்பிக்க ஏற்கனவே வழங்கப்பட்ட அவகாசம் முடிவடைந்துள்ள நிலையில் மேலும் 3 மாதங்களுக்கு சிறப்பு புதுப்பித்தல் சலுகை வழங்கி அரசு ஆணையிடுகிறது.

இச்சலுகையைப் பெற விரும்பும் வேலைநாடுநர்கள், அரசாணை வெளியிடப்படும் நாளிலிருந்து 3 மாதங்களுக்குள் விடுபட்ட பதிவினை புதுப்பித்துக்கொள்ளலாம். இச்சலுகை ஒரு முறை மட்டும் வழங்கப்படும். மூன்று மாதங்களுக்குப் பின் பெறப்படும் கோரிக்கைகள் நிராகரிக்கப்படும். 1.1.2014க்கு முன் புதுப்பிக்க தவறியவர்களின் கோரிக்கைகள் ஏற்றுக் கொள்ளப்பட மாட்டாது.  இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Related Stories:

More