×

பெங்களூருவில் 2 பேருக்கு பாதிப்பு: இந்தியாவில் நுழைந்தது ஒமிக்ரான்: யாரும் பீதியடைய வேண்டாம்: ஒன்றிய அரசு வேண்டுகோள்

பெங்களூரு: தென் ஆப்ரிக்காவில் இருந்து கர்நாடகாவுக்கு வந்த 2 பேருக்கு ஒமிக்ரான் கொரோனா தொற்று இருப்பது உறுதியாகி இருக்கிறது. ஆனால், இவர்களில் ஒருவர் வெளிநாடு சென்று விட்டார். இதனால், பரபரப்பு ஏற்பட்டுள்ளது. ஆனால், இந்த தொற்று குறித்து மக்கள் அச்சப்பட தேவையில்லை என்று ஒன்றிய அரசு கூறியுள்ளது. இந்தியாவில் கொரோனா வைரஸ் தொற்று பாதிப்பு பல லட்சம் பேரின் உயிரை பறித்தது. தொற்று பரவல் ஓரளவு கட்டுக்குள் வந்தாலும்  கொரோனாவின் உருமாற்ற வைரஸ் பற்றிய அச்சம் மட்டும் ஓயவில்லை. ஒவ்வொரு வகையாக உருமாற்றமடைந்து உலக நாடுகள் முழுவதும் பரவி அச்சுறுத்தி வருகிறது. ஆல்பா, பீட்டா, டெல்டா, டெல்டா பிளஸ் என்ற வரிசையில் தற்போது ஒமிக்ரான் தொற்று பரவி உள்ளது.  தென் ஆப்ரிக்காவில் கண்டறியப்பட்டுள்ள புதிய வீரியமிக்க ‘ஒமிக்ரான்’ கொரோனா வைரஸ் 29க்கும் மேற்பட்ட நாடுகளில் பரவி உள்ளது.

இதனால், உலக முழுவதும் முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகின்றன. இந்த கொரோனா வைரஸ் இந்தியாவுக்குள் பரவுவதை தடுக்க முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுக்க பிரதமர் மோடி உத்தரவிட்டார். அதன்படி, அந்தெந்த மாநிலங்கள் முன்னெச்சரிக்கை நடவடிக்கையை தீவிரப்படுத்தப்பட்டு உள்ளது. குறிப்பாக, ஒமிக்ரான் பரவி உள்ள நாடுகளில் இருந்து இந்தியா வந்தவர்களின் பட்டியலை எடுத்தனர்.  அதன்படி, தென் ஆப்பிரிக்காவில் இருந்த கடந்த மாதம் கர்நாடகாவுக்க வந்த 95 பயணிகளுக்கு கொரோனா பரிசோதனை மேற்கொள்ளபட்டதில்,  2 பேருக்கு தொற்று பாதிப்பு உறுதி செய்யப்பட்டது. இவர்களுக்கு ஒமிக்ரான் தொற்று இருக்கலாம் என சந்தேகிக்கப்பட்டதால், 2 பேரும் தனிமைப்படுத்தப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டது. அவர்களின் மாதிரிகள், கூடுதல் பரிசோதனைக்காக அனுப்பப்பட்டது. அதன் முடிவு நேற்று தெரிய வந்தது. அதில், 2 பேருக்கும் ஒமிக்ரான் தொற்று இருப்பது உறுதியாகி உள்ளது. இதன்மூலம், இந்தியாவிலும் இந்த வைரஸ் நுழைந்து விட்டது. டெல்லியில் நேற்று அளித்த பேட்டியில் இதை உறுதிப்படுத்திய ஒன்றிய சுகாதார துறை இணை செயலாளர் லா அகர்வால்,  இதற்காக மக்கள் யாரும் அச்சம் அடைய வேண்டாம் என்று தெரிவித்தார்.

பெங்களூரு மாநகராட்சி தலைமை கமிஷனர் கவுரவ் குப்தா அளித்த பேட்டி வருமாறு:  தென் ஆப்ரிக்காவில் இருந்து வந்த 66 வயதான  நபருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. இதனால், அவர் ஒட்டலில் தனிமைப்படுத்தப்பட்டார். 3 நாட்களுக்கு பின் மீண்டும் அவருக்கு பரிசோதனை செய்யப்பட்ட போது அவருக்கு வைரஸ் பாதிப்பு இல்லை என தெரியவந்தது. இதையடுத்து அவரை அனுப்பி விட்டோம். ஆனாலும், அவரின் சளி உள்ளிட்ட மாதிரிகள் ஓமிக்ரான் வைரஸ் பரிசோதனை மையத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டது.  இதுபோல், மற்றொரு 46 வயதான நபருக்கு கொரோனா தொற்று உறுதியான நிலையில் அவரின் சளி மாதிரிகள் ஒமிக்ரான் பரிசோதனைக்கு அனுப்பி வைக்கப்பட்டிருந்தது. 3 நாட்களுக்கு பின் அந்த நபருக்கு நடந்த பரிசோதனையில் வைரஸ் தொற்று  பாதிப்பு இல்லை என  முடிவு வந்ததால் அவர் வீட்டிற்கு அனுப்பி வைக்கப்பட்டார்.  இந்நிலையில், அந்த 2 பேரின் மாதிரிகளை பரிசோதனை செய்த மருத்துவ நிபுணர்கள்   ஒமிக்ரான் வைரஸ் தொற்று இருப்பதை நேற்று உறுதி செய்தனர்.  தென் ஆப்பிரிக்காவை சேர்ந்த 66 வயதான நபர் நவம்பர் 20ம் தேதி பெங்களூரு வந்தார். 23ம் தேதி வைரஸ் இல்லை என முடிவு வந்ததை தொடர்ந்து அவர், கடந்த 27ம் தேதி  துபாய் சென்று விட்டார். ஒமிக்ரான் பாதிக்கப்பட்ட மற்றொரு 46 வயதான நபருக்கு பெங்களூரு  சிவராஜி நகர் பவுரிங் மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.  இந்த 2 பேருடன் யார் யார் தொடர்பில் இருந்தனர்? என்பது உள்ளிட்ட விபரங்கள் சேகரிப்பட்டுள்ளன. இவ்வாறு அவர் கூறினார்.

3 நாளில் அனுப்பியது தவறு
வெளிநாடுகளில் இருந்து வரும் விமான பயணிகளுக்கு  ஆர்டிபிசிஆர் பரிசோதனை நடத்திய பிறகு 7 நாள் கட்டாய  தனிமைப்படுத்த வேண்டும். ஆனால், 2 பேருக்கு வைரஸ் தொற்று உறுதியாகி, அதன் பிறகு பாதிப்பு இல்லை என தெரிந்ததும் வெளியே அனுப்பியுள்ளனர். அவர்களை 7 நாள் தனிமைப்படுத்தி வைத்திருந்தால் தற்போது ஏற்பட்டுள்ள பதற்றத்துக்கு இடம் இருந்திருக்காது என்று நிபுணர்கள் கூறியுள்ளனர்.

முதல் கொரோனா கேரளா முதல் ஒமிக்ரான் கர்நாடகா
இந்தியாவில் முதல் முறையாக கடந்தாண்டு கேரளாவில்தன் கொரோனா  கால் பதித்தது. அதேபோல், கொரோனா முதல் உயிரிழப்பு கர்நாடகாவில் நடந்தது. இந்நிலையில், நாட்டின் முதல் ஒமிக்ரான் தொற்று தற்போது கர்நாடகாவில் பதிவாகி உள்ளது

தமிழக பயணிகளுக்கு கட்டுப்பாடு
கர்நாடகாவில் கொரோனா பரவல் அதிகரிப்பு, ஒமிக்ரான் தொற்று பரவல் காரணமாக மாநில எல்லையில், கேரளா, மகாராஷ்டிராவில் இருந்து வருபவர்களுக்கு ஆர்டிபிசிஆர் பரிசோதனை கட்டாயமாக்கப்பட்டு இருக்கிறது. தற்போது, தமிழகத்தில் இருந்து வருபவர்களுக்கும் இந்த பரிசோதனை கட்டாயமாக்கப்படும் என்று இம்மாநில முதல்வர் பொம்மை தெரிவித்துள்ளார்.


Tags : Bangalore ,Omigron ,India ,Union government , Bangalore, Omicron, Corona
× RELATED பெங்களூரு குண்டுவெடிப்பு – தமிழ்நாட்டில் NIA சோதனை