×

இரவு பகலாக வேலை செய்யாவிட்டால் ஸ்பேஸ் எக்சை இழுத்து மூட வேண்டியது தான்: ஊழியர்களுக்கு எலான் மஸ்க் எச்சரிக்கை

புதுடெல்லி: ‘வார இறுதி நாட்களிலும் வேலை செய்யாவிட்டால், கம்பெனி திவாலாகி விடும்,’ என தனது ஊழியர்களை ‘ஸ்பேஸ் எக்ஸ்’ நிறுவனர் எலான் மஸ்க் எச்சரித்துள்ளார். ‘விண்வெளிக்கு சுற்றுலா’ என்ற கனவை, விண்வெளி வீரர்கள் அல்லாத சாதாரண மக்களுக்கும் நனவாக்கி வருபவர் எலான் மஸ்க். அமெரிக்காவை சேர்ந்த இவருடைய ‘ஸ்பேஸ் எக்ஸ்’ நிறுவனம்தான், இந்த சாதனையை படைத்து வருகிறது. உலகின் பெரும் பணக்காரர்களில் மஸ்க்கும் ஒருவர். விண்வெளியில் சாதனை படைத்து கொண்டிருக்கும் பிரமாண்டமான இந்த தனியார் நிறுவனம், ஏற்கனவே 3 முறை விண்வெளிக்கு பலரை சுற்றுலா அழைத்து சென்று வந்து விட்டது. அடுத்ததாக, செவ்வாய் கிரகத்துக்கும், நிலவுக்கும் ராக்கெட் மூலம் மனிதர்களை விண்வெளி சுற்றுலாவுக்கு அழைத்து செல்லும் ஏற்பாடுகளை தீவிரமாக செய்து வருகிறது. இதற்காக, ‘ராப்டர்’ என்ற ராக்கெட் இன்ஜினை தயாரித்து கொண்டிருக்கிறது. இந்த இன்ஜினை பயன்படுத்தி, ஒரே நாளில் இந்த கிரகங்களுக்கு சுற்றுலா பயணிகளை அழைத்து செல்ல திட்டமிடப்பட்டுள்ளது. இதற்கான பல ஆயிரம் கோடி முதலீடு செய்யப்பட்டு வருகிறது.

இந்நிலையில், கடந்த வாரம் தனது ஊழியர்களுக்கு எலான் மஸ்க் அனுப்பிய இ-மெயிலில் கூறியிருப்பதாவது: மனிதர்களை நிலவுக்கும், செவ்வாய் கிரகத்துக்கும் அழைத்து செல்வதில் முக்கிய பங்கு வகிக்கும் ராப்டர் ராக்கெட் இன்ஜினின் தயாரிப்பு பணிகள் மும்முரமாக நடந்து வந்தன. ஆனால், இதற்கு முன்பிருந்த நிர்வாகத்தின் மூத்த அதிகாரிகள் சிலர் வெளியேறியதால், அவர்கள் விட்டு சென்ற ராப்டர் இன்ஜின் தயாரிப்பு பணியை தொடர்வதில் உள்ள சிக்கல்கள் கடந்த வாரம் இருந்ததை காட்டிலும், தற்போது துரதிருஷ்டவசமாக மிகவும் மோசமான நிலைக்கு சென்றுள்ளது. இதை மூடி மறைக்க வேண்டிய அவசியம் இல்லை.

வார இறுதி நாட்களில் விடுமுறை எடுக்காமல், இரவு, பகல் பாராமல் கடுமையாக உழைத்து இந்த இன்ஜின் தயாரிப்பை பணியை முடிக்கவில்லை என்றால், ‘ஸ்பேஸ் எக்ஸ்’ நிறுவனம் திவால் நிலைக்கு சென்று விடும். எனவே, இது நிறுவனத்தினர் அனைவரும் இணைந்து பணியாற்ற வேண்டிய தருணம். விண்கலத்துக்கு தேவையான, நம்பகமான ராப்டர் இன்ஜின்களை போதுமான அளவில் தயாரிக்காவிட்டால், நட்சத்திர இணைப்பு செயற்கைகோள்களான வி-2, வி-1ஐ விண்வெளிக்கு அனுப்ப முடியாது. இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Tags : SpaceX ,Elon Musk , Elon Musk warns staff to shut down SpaceX if not working day and night
× RELATED X தளத்தில் புதிதாக இணையும் பயனர்கள்...