திமுக இளைஞர் அணி இணையதளம்: உதயநிதி ஸ்டாலின் தொடங்கி வைத்தார்

சென்னை: திமுக இளைஞர் அணியின் இணையதளத்தை, இளைஞர் அணி செயலாளர் உதயநிதி ஸ்டாலின் எம்எல்ஏ நேற்று தொடங்கி வைத்தார். மேலும் பொதுமக்கள் பயன்படுத்தும் வகையில் அன்பகத்தில் கலைஞர் நூலகத்தையும் அவர் தொடங்கி வைத்தார். திமுக இளைஞர் அணி செயலாளரும் சேப்பாக்கம்-திருவல்லிக்கேணி சட்டமன்ற உறுப்பினருமான உதயநிதி ஸ்டாலின் நேற்று மாலை சென்னை, தேனாம்பேட்டையில் உள்ள இளைஞர் அணியின் தலைமை அலுவலகமான அன்பகத்தில் இளைஞர் அணியின் இணையதளத்தை (https://www.youthwingdmk.in/) தொடங்கிவைத்தார்.

செயலாளர்களின் அறிக்கைகள், அவர் கலந்துகொள்ளும் நிகழ்ச்சிகள், அணியின் மக்கள் பணிகள், செய்திகள், கழக இதழ்கள், வெளியீடுகள், அணியின் நிர்வாகிகள் உள்பட இளைஞரணி தொடர்பான அனைத்து தகவல்களும் நேற்று தொடங்கி வைக்கப்பட்ட இணையதளத்தில் இடம்பெறும். மேலும், இளைஞர் அணியில் உறுப்பினர்களாக சேர விரும்புவோர் இந்த இணையதளத்தின் மூலமாக விண்ணப்பிக்கவும் வசதி ஏற்படுத்தப்பட்டுள்ளது. மேலும் திராவிட இயக்கத்தின் கொள்கைகள், தலைவர்களின் வாழ்க்கை வரலாறு, கட்சி முன்னோடிகளின் படைப்புகள், வரலாற்று நிகழ்வுகள், அரசியல் கட்டுரைகளை இன்றைய தலைமுறை இளைஞர்களும், மாணவர்களும், பொதுமக்களும் அறிந்துகொள்ள உதவும் வகையில், முத்தமிழறிஞர் பெயரில்  ‘கலைஞர் நூலகம்’ இளைஞர் அணியின் தலைமையகமான அன்பகத்தில் அமைக்கப்பட்டுள்ளது.

திராவிட இயக்கத்தினரின் எழுத்துகள் மட்டுமின்றி, இலக்கியம், வரலாறு, சிறுகதைகள், நாவல், கவிதை, கட்டுரைகள் உள்ளிட்ட பல்வேறு துறை சார்ந்த நூல்களும், மின்நூல்களும் இங்கு இடம்பெற்றுள்ளன. நூல்களை வாசிப்பதற்கும், குறிப்பு எடுத்துக்கொள்வதற்கும் பயன்படுத்திக்கொள்ளலாம். காலை 10 மணி முதல் மாலை 6 மணி வரை அலுவலக நாட்களில் திறந்திருக்கும். மாணவர்கள், இளைஞர்கள், பொதுமக்கள் என பலரும் பயன்படுத்திக்கொள்ளலாம்.

இந்த நூலகத்தை இளைஞர் அணிச் செயலாளரும் சட்டமன்ற உறுப்பினருமான உதயநிதி ஸ்டாலின் நேற்று மாலை திறந்துவைத்தார். அப்போது, திண்டுக்கல் கிழக்கு மாவட்ட செயலாளர் செந்தில்குமார், மாநில இளைஞர் அணி துணை செயலாளர்கள் ஆர்.டி.சேகர், தாயகம் கவி., செய்தி தொடர்புத் துறை இணைச் செயலாளர் வழக்கறிஞர் சரவணன், ஐட்ரீம் மூர்த்தி, இளைஞர் அணி மாவட்ட அமைப்பாளர்கள் எபினேசர், பிரபாகர் ராஜா, மகேஷ்குமார், அஷ்ரஃப் அலி, ஆறுமுகசாமி உட்பட பலர் உடனிருந்தனர்.

Related Stories: