தண்டலம் ஏரி உடைப்பு

திருப்போரூர்: திருப்போரூர் அருகே தண்டலம் ஏரி உடைப்பு இதனால் 300 ஏக்கர் விவசாய நிலங்கள் நீரில் மூழ்கி உள்ளன. கடந்த ஒரு மாதமாக பெய்து வந்த வடகிழக்குப் பருவமழை, 2 நாட்களாக ஓய்ந்துள்ளது. இதையொட்டி, திருப்போரூர் அடுத்த தண்டலம் ஊராட்சியில் அடங்கிய ஓஎம்ஆர் சாலையை ஒட்டி இரு பக்கங்களிலும் விவசாய நிலங்களில் வெள்ளநீர் வந்த வண்ணம் இருந்தது. மழை ஓய்ந்த பிறகும் வெள்ளநீர் வந்து கொண்டிருந்ததால் சந்தேகமடைந்த தண்டலம் ஊராட்சி மன்ற தலைவர் ஆனந்தன் தலைமையில், விவசாயிகள் வனப்பகுதி வழியாக சென்று வெள்ளநீர் வரும் வழியை ஆய்வு செய்தனர்.

அப்போது, வனப்பகுதியின் உள்ளே இருந்த புத்தேரி கரை உடைந்து வெள்ளநீர் வெளியேறுவது தெரிந்தது. இதையடுத்து பொதுப்பணித்துறைக்கும், வருவாய்த்துறைக்கும் தகவல் தெரிவிக்கப்பட்டது. தண்டலம் கிராம விஏஓ தரணி மற்றும் வருவாய்த்துறை ஊழியர்கள் அங்கு சென்று பார்வையிட்டனர். ஆனால், வாகனங்கள் செல்ல முடியாத அளவுக்கு அடர்ந்த வனப்பகுதியாக இருப்பதாலும், இருட்டி விட்டதாலும் கரை உடைப்பை தடுக்க முடியவில்லை. தண்டலம் கிராமத்தில் உள்ள 300 ஏக்கர் விவசாய நிலம் நீரில் மூழ்கி உள்ளது. தொடர்ந்து, நேற்று காலை மண் மூட்டைகளை கொண்டு ஏரிக்கரையை சீரமைக்க முடிவு செய்தனர். அதன்படி, மணல் மூட்டைகள் வரவழைக்கப்பட்டு, பொதுமக்கள் உதவியுடன் ஏரியில் இருந்து வெளியேறும் தண்ணீரை தடுத்து நிறுத்தும் பணியில் அதிகாரிகள் ஈடுபட்டனர்.

Related Stories:

More