அரசுப்பேருந்து ஏணியில் பயணித்த மாணவன்: சமூக வலைத்தளத்தில் வைரலான வீடியோ; போக்குவரத்துறை இணை ஆணையர் அறிவுரை

கும்மிடிப்பூண்டி: கும்மிடிப்பூண்டி, பொன்னேரி, செங்குன்றம், புழல், கவரப்பேட்டை உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் உள்ள அரசு பள்ளிகளில் மாணவ, மாணவிகள் ஆயிரத்துக்கும் மேற்பட்டோர்  அரசு பேருந்தில் பயணித்து படித்து வருகிறார்கள். இந்நிலையில், சில நாட்களுக்கு முன்பு பொன்னேரி பணிமனையிலிருந்து சத்தியவேடு வரை செல்லும் அரசு பேருந்தில் பள்ளி மாணவர் ஒருவர் படிக்கட்டில் பயணம் செய்த வீடியோ ஒன்று சமூக வலைத்தளங்களில் வைரலாக பரவியுள்ளது. இதனை கண்ட, செங்குன்றம் வட்டாரப் போக்குவரத்து அலுவலர் இளமுருகன் மற்றும் கும்மிடிப்பூண்டி மோட்டார் வாகன ஆய்வாளர் ராஜராஜேஸ்வரி ஆகியோர் போக்குவரத்து ஆணையருக்கு இதை பற்றி தகவல் தெரிவித்தனர். மண்டல போக்குவரத்து துறை இணை ஆணையர் ரவிச்சந்திரன் நேற்று கவரப்பேட்டை பள்ளி படிக்கும்  மாணவனை சந்தித்து அறிவுரை வழங்கினார்.

பின்னர் அவர் நிருபர்களிடம் கூறியது, சாலை பாதுகாப்பு வாரங்களில் பள்ளி, கல்லூரிகளில் மாணவர்களுக்கு தொடர்ந்து விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டு வருகிறது. பள்ளி மாணவர்களுக்கு தொடர்ந்து சாலை பாதுகாப்பு விதிகள் குறித்து விழிப்புணர்வை ஏற்படுத்த பாடத்திட்டத்தில் சேர்ப்பது குறித்து கல்வித்துறை அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தப்பட்டு வருகிறது. பள்ளி நேரங்களில் கூடுதல் பேருந்துகள் இயக்குவது குறித்து போக்குவரத்து கழக அதிகாரிகளிடம் ஆலோசனை நடத்தி நடவடிக்கை எடுக்கப்படும். பேருந்தில் உள்ள படிக்கட்டிலும் பின்புறத்தில் உள்ள ஏணியிலும் தொங்கியபடி பயணிப்பது ஆபத்தை விளைவிக்கும். இனி வரும் காலங்களில் இது போன்ற செயல்களில் ஈடுபட வேண்டாம் என மாணவனுக்கு அறிவுரை வழங்கி பேசினார்.

Related Stories:

More