லேப்டாப்பை துவைக்கும் மனைவி விவாகரத்து கோரி கணவன் கதறல்: கர்நாடகாவில் பரிதாபம்

பெங்களூரு: கர்நாடக மாநிலம், மைசூருவை சேர்ந்தவர் சத்யா (35) (பெயர் மாற்றப்பட்டுள்ளது). இவரது கணவன் கிரிஷ் (40). இருவரும் பெங்களூரு ஆர்.டி.நகரில் வசித்து வருகின்றனர். 11, 9 வயதில் 2 மகன்கள் உள்ளனர். தனியார் சாப்ட்வேர் நிறுவனத்தில் கிரிஷ் வேலை செய்தார். பின்னர், இங்கிலாந்தில் வேலை கிடைத்து குடும்பத்துடன் சென்றார். அங்கு சத்யாவின் நடவடிக்கையில் மாற்றம் ஏற்பட்டது. ஒரு நாளைக்கு அதிக முறை குளிப்பது, வீடுகளை அடிக்கடி சுத்தம் செய்வது, வீடுகளில் ஒவ்வொருவர் சாப்பிடுவதற்கும் பிரத்யேக பொருட்களை ஒதுக்கி கொடுத்ததாக கூறப்படுகிறது.

கொரோனா தொற்று பரவிய காலத்தில் அனைவரும் பெங்களூரு வந்து விட்டனர். இங்கும் கொரோனா அச்சம் காரணமாக தினமும் வீட்டை கழுவி சுத்தம் செய்தார் சத்யா. கணவனின் செல்போன், லேப்டாப்பை தண்ணீர் போட்டு சுத்தம் செய்வது, குழந்தைகளின் பேக், ஷீ ஆகியவற்றை அடிக்கடி சோப்பு அல்லது சானிடைசர் வைத்து சுத்தம் செய்தார். ஒரு ஆண்டிற்கு முன்பு உடல் நலக்குறைவால் சத்யாவின் தாயார் இறந்து விட்டார். பின்னர், கூடுதல் சுத்தமாக இருக்க முயற்சித்தார். ஒரு நாளைக்கு 6 முறை குளித்துள்ளார்.

இவர் பயன்படுத்திய சோப்பை தூய்மை செய்வதற்கு வேறுவொரு சோப்பை பயன்படுத்தினார். கணவனின் லேப்டாப் அல்லது செல்போனை தினமும் 4 முதல் 5 முறை சோப்பு தண்ணீர் அல்லது சானிடைசர் வைத்து சுத்தம் செய்தார்.

 மனைவியின் நடவடிக்கையில் அதிருப்தி அடைந்த கிரிஷ், குழந்தைகளை அழைத்து கொண்டு, ஹாசனில் உள்ள தனது பெற்றோர் வீட்டிற்கு சென்றார். ஆத்திரம் அடைந்த சத்யா, ஆர்.டிநகர் போலீசில் புகார் அளித்தார். இதை பசவனகுடி மகளிர் உதவி மைய போலீசார் விசாரித்தனர்.

அப்போது, ‘நான் மாற முடியாது வேண்டுமென்றால், கணவனை மாறும்படி கூறுங்கள். சுத்தமாக இருப்பது தவறா?’ என்று சத்யா கேட்டார். தனது மனைவிக்கு மனநிலை பாதிக்கப்பட்டு இருக்கலாம் என கிரிஷ் சந்தேகம் தெரிவித்தார். ஆனால், போலீசாரின் அறிவுரைப்படி சிகிச்சை பெறுவதற்கு சத்யா மறுத்தார். கணவனை மருத்துவமனையில் சேர்க்கும்படி வாதிட்டார். இதனால் மிகவும் மன உளைச்சல் அடைந்துள்ள கிரிஷ், மனைவியிடம் இருந்து விவாகரத்து பெற நீதிமன்றத்தை நாட போவதாக அறிவித்துள்ளார்.

Related Stories: