மாரடைப்பு நோயாளிக்கு சிகிச்சை அளித்த டாக்டருக்கும் மாரடைப்பு: இருவரும் அடுத்தடுத்து சாவு

ஐதராபாத்: தெலங்கானாவில் மருத்துவமனையில் மாரடைப்பு வந்த முதியவரை காப்பாற்ற முயன்ற மருத்துவருக்கும் மாரடைப்பு ஏற்பட்டது. இருவரும் அடுத்தடுத்து உயிரிழந்தனர். தெலங்கானா மாநிலம், கமாரெட்டி மாவட்டத்துக்கு உட்பட்ட காந்தாரி மண்டல் பகுதியில் மருத்துவமனை இயங்கி வருகிறது. இந்த மருத்துவமனைக்கு கடந்த ஞாயிறு காலை மாரடைப்பு ஏற்பட்டதாக கேதவாத் ஜாகையா நாயக் (60) என்பவர் அழைத்து வரப்பட்டு, தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டார். மருத்துவர் லஷ்மண் (40), செவிலியர்கள் அவருக்கு தீவிர சிகிச்சை அளித்துக் கொண்டு இருந்தனர்.

நோயாளியின் நிலை மோசமாக இருந்ததால் லஷ்மண் (40) அவரது நெஞ்சில் கை வைத்து அழுத்தி உயிர்காக்கும் முயற்சியில் ஈடுபட்டார். அப்போது, திடீரென லஷ்மணனுக்கும் மாரடைப்பு ஏற்பட்டு கீழே சரிந்து விழுந்தார். செவிலியர்கள் அவரை காப்பாற்ற முயன்றும் பலனின்றி அவர் பரிதாபமாக உயிரிழந்தார். அதே நேரத்தில் ஜாகையாவின் உடல்நிலை மோசமடைந்ததால் அவரது குடும்பத்தினர் வேறு மருத்துவமனைக்கு அழைத்து சென்றனர். ஆனால், அங்கு அவரும் உயிரிழந்தார். மருத்துவர் லஷ்மண் மகபூபாத் மாவட்டத்தை சேர்ந்தவர். இவர், நிசாமாபாத் மருத்துவ கல்லூரியில் பேராசிரியராக பணியாற்றி வந்தார்.

Related Stories: