பாஜ எம்எல்ஏவை கொல்ல ரூ.5 கோடி பேரம் கூலிப்படை தலைவன் கைது: செல்போன் உரையாடல் வெளியாகி பரபரப்பு

பெங்களூரு: பாஜ எம்எல்ஏவை கொல்ல ரூ.5 கோடி தருகிறேன் என்று கூலிப்படை தலைவனிடம் காங்கிரஸ் மாஜி எம்எல்ஏ பேசும் செல்போன் உரையாடல் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தி உள்ளயது. கர்நாடகாவில் பெங்களூரு பெருநகர் வளர்ச்சி குழும தலைவராகவும், பாஜ எம்எல்ஏவுமாக  இருப்பவர் விஸ்வநாத். இவரை கொலை செய்ய, ஆந்திராவை சேர்ந்த கூலிப்படை தலைவன் குள்ள தேவராஜிடம், இம்மாநில காங்கிரஸ் முன்னாள் எம்எல்ஏ கோபாலகிருஷ்ணா ரூ.5 கோடிக்கு பேரம் பேசிய வீடியோ ஆதாரத்தை விஸ்வநாத் நேற்று முன்தினம் வெளியிட்டார். இது பற்றி அவர் அளித்த புகாரின் பேரில், போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர். இந்நிலையில், கோபாலகிருஷ்ணா- குள்ள தேவராஜ் இடையே நடந்த செல்போன் உரையாடலும் நேற்று வெளியானது.

அதன் விவரம் வருமாறு:

கோபாலகிருஷ்ணா: எம்எல்ஏவை (எஸ்.ஆர்.விஸ்வநாத்) பினிஷ் செய்ய வேண்டும். இரண்டில் ஒன்று ஆக வேண்டும். அடித்து கொலையா? சுட்டுக் கொலையா? எதை செய்கிறாய் சொல்?

குள்ள தேவராஜ்: அவனை பினிஷ் செய்வது பெரிய விஷயமல்ல.

கோபாலகிருஷ்ணா: பினிஷ் செய்தால் எது நடந்தாலும் பரவாயில்லை. நானும் நீயும் இரண்டு பேரும் செய்யலாம். இதை மிகவும் ரகசியமாக செய்ய வேண்டும். யாருக்கும் தெரியக்கூடாது.

குள்ள தேவராஜ்: செய்யலாம், ஆனால், ரியல் எஸ்டேட் செய்ய வேண்டும்.

கோபாலகிருஷ்ணா: ரியல் எஸ்டேட் என்ன? எது வேண்டுமானாலும் சரி. டிசி, ஏசி, பிசி, சீப் செக்கரட்ரி என என்ன வேண்டுமானாலும் அரேஞ் செய்து கொடுக்கிறேன். ஆனால், நான் நினைத்தது நடக்க வேண்டும்.

குள்ள தேவராஜ்: உங்கள் ஆட்சி இருந்தபோது, தேவையில்லாத ஆட்களை உடன் வைத்திருந்தாய், என்ன செய்ய முடிந்தது?

கோபாலகிருஷ்ணா: கடந்த கால கதையை விடுப்பா, இப்போது அவனை பினிஷ் செய்ய வேண்டும். பணம் எவ்வளவு செலவானாலும் பார்த்து கொள்ளலாம்.

குள்ள தேவராஜ்: கள்ள ராஜா, சுப்பண்ணாவுக்கு கூடுதலாக ரூ.2 லட்சம் கொடுக்கலாம் அண்ணா.

கோபாலகிருஷ்ணா: சரி பார்த்து கொள்ளலாம்.

குள்ள தேவராஜ்: டிபார்ட்மென்ட் பிரச்னையை நீங்கள் பார்த்து கொள்ள வேண்டும். போலீசார் மூலம் ஒரு அடி கூட விழக்கூடாது.

கோபாலகிருஷ்ணா: அதை நான் பார்த்து கொள்கிறேன்.

குள்ள தேவராஜ்: இந்த வேலைக்கு பழைய ஆட்களை பயன்படுத்தக் கூடாது. ஷாட் சூட்டர்களை அழைக்க வேண்டும் அண்ணா.

கோபாலகிருஷ்ணா: தினம் காலை 6 முதல் 7 மணி வரை தனியாக இருக்கிறான். கூட யாரும் இருப்பதில்லை. இது நல்ல சான்ஸ்.

குள்ள தேவராஜ்: பைக்கில் சென்று பார்க்கிறேன்.

கோபாலகிருஷ்ணா: இரண்டு, மூன்று நாட்கள் சூழ்நிலையை ஆராய்ந்த பின் பினிஷ் செய்ய வேண்டும்.

குள்ள தேவராஜ்: ஷாட் சூட்டர்களை பாண்டிச்சேரியில் இருந்து அழைத்து வருகிறேன். அவர்களுக்கு எம்எல்ஏ என்று சொல்லாமல் ரியல் எஸ்டேட் அதிபர் என்று சொல்கிறேன்.

கோபாலகிருஷ்ணா: தினமும் தனியாக ஜீப் ஓட்டி வருகிறான். அந்த சந்தர்ப்பம் பார்த்து போட்டு தள்ள வேண்டும்.

குள்ள தேவராஜ்: சரியாக ஸ்கெட்ச் போட வேண்டும். 2 பல்சர் பைக் வேண்டும்.

கோபாலகிருஷ்ணா: அவனை பினிஷ் செய்ய ரூ.100 கோடி செலவிட வேண்டாம். ரூ.4 முதல் ரூ.5 கோடியில் முடிக்க வேண்டும்.

குள்ள தேவராஜ்: அண்ணா இவனுடனாவது (விஸ்வநாத்) வாழலாம். இன்னொருவன் உள்ளானே நாகஷெட்டி, அவன் மிகவும் ஆபத்தானவன். இவ்வாறு உரையாடல் முடிகிறது.

இந்த செல்போன் ஆடியோ தற்போது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

இந்த உரையாடலில் பேசியது கோபாகிருஷ்ணா என்பது உறுதி செய்யப்பட்டால், அவர் விரைவில் கைதாகலாம் என்று கூறப்படுகிறது.

இந்நிலையில், கூலிப்படை தலைவனை கர்நாடகா போலீசார் கைது செய்து, ரகசிய இடத்தில் வைத்து விசாரித்து வருவதாக தகவல் வெளியாகி உள்ளது.

Related Stories:

More