காவிரி-குண்டாறு இணைப்புக்கு கர்நாடகா அரசு முட்டுக்கட்டை: ஒன்றிய அரசிடம் பொம்மை புதிய நிபந்தனை

பெங்களூரு: ‘காவிரியில் மேகதாது கட்டுவதற்கு அனுமதி அளித்த பிறகே தமிழக அரசின் காவிரி-குண்டாறு உள்ளிட்ட நதிகளின் இணைப்பிற்கு அனுமதி தர வேண்டும்,’ என ஒன்றிய அரசிடம் கர்நாடகா முதல்வர் பசவராஜ் பொம்மை கோரியுள்ளார். கர்நாடகா முதல்வர் பசவராஜ் பொம்மை நேற்று டெல்லி சென்றார். அங்கு ஒன்றிய சுகாதார துறை அமைச்சர்  மன்சுக் மாண்டவியா தலைமையில் நடந்த ஒமிக்ரான் தொற்று பரவல் தடுப்பு ஆலோசனை கூட்டத்தில் பங்கேற்றார். தொடர்ந்து, சட்டத்துறை அமைச்சர் கிரண் ரிஜிஜூ, நீர்வளத்துறை அமைச்சர் கஜேந்திர சிங் ஷெகாவத்தை சந்தித்து பேசினார்.

பின்னர், அவர் அளித்த பேட்டியில் கூறியதாவது: வரும் 6ம் தேதி நதிகள் தொடர்பான ஆலோசனை கூட்டம் நடைபெறுகிறது. இதில், கிருஷ்ணா மேலணை திட்டத்தை தேசிய திட்டமாக அறிவிக்கும்படி வலியுறுத்தினேன். கிருஷ்ணா மேலணை 2வது திட்டத்திற்கான முதற்கட்ட அனுமதி தர வேண்டும் என்றும், உச்ச நீதிமன்றத்தில் இதற்கான வழக்கில் விரைவில் தீர்வு கிடைக்கும் வகையில்  ஒன்றிய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் கேட்டுக் கொண்டேன்.

மேகதாது அணை கட்டுவதற்கான அனுமதி விரைவில் கிடைக்க வேண்டும் என்பதற்காக ஒன்றிய நீர்ப்பானத்துறை அமைச்சர் கஜேந்திர சிங் ஷெகாவத்துடன் ஆலோசனை நடத்தினேன். இந்த அணை கட்டுவதற்கு தமிழக அரசு தடையாக உள்ளது. அதே நேரம், காவிரி-குண்டாறு உள்ளிட்ட நதிகளை இணைப்பதற்கு முன்வந்துள்ளது. மேகதாது அணையை கட்டுவதற்கு கர்நாடகாவுக்கு அனுமதி அளித்த பிறகே தமிழக அரசின் திட்டங்களுக்கு அனுமதி அளிக்க வேண்டும் என்று ஒன்றிய அமைச்சர்களிடம் வலியுறுத்தி உள்ளேன். இவ்வாறு அவர் கூறினார்.

Related Stories:

More