கொடி நாள் நிதிக்கு அதிக நன்கொடை சன் டி.வி.க்கு பாராட்டு

முன்னாள் பாதுகாப்பு படையினருக்கான நலத் திட்டங்களை செயல்படுத்துவதற்காக அதிக நிதி கொடுத்த சன் டி.வி. கவுரவிக்கப்பட்டது. பாதுகாப்பு அமைச்சகத்தின் கீழ் செயல்படும் கேந்திரிய சைனிக் போர்டு மூலம், முன்னாள் படை வீரர்களுக்கான நலத் திட்டங்கள் செயல்படுத்தப்படுகின்றன. நாடு முழுவதும் 37 லட்சத்துக்கும் மேற்பட்ட முன்னாள் படைவீரர்கள் இதனால் பயனடைந்து வருகின்றனர். இதற்கான நிதி திரட்டும் வகையில், டிசம்பர் 7ம் தேதி கொடி நாளாக அறிவிக்கப்பட்டு, கொடி நாள் நிதி திரட்டப்படுகிறது. பெரு நிறுவனங்களின் சமூகப் பொறுப்புத் திட்டத்தின் கீழ் கொடி நாள் நிதிக்கு தாராளமாக நன்கொடைகளை அளிக்குமாறு கேந்திரிய சைனிக் போர்டு கேட்டுக்கொண்டது.

இதையேற்று, கொடி நாள் நிதியாக சன் டி.வி. கடந்த ஆண்டில் 5 கோடி ரூபாயும், இந்த ஆண்டு ஒரு கோடி ரூபாயும் நிதி அளித்தது. அதிக அளவில் கொடி நாள் நிதி அளித்த நிறுவனங்களை கவுரவப்படுத்துவதற்கான நிகழ்ச்சி டெல்லி கன்டோன்மென்ட் பகுதியில் உள்ள விமானப்படை அரங்கில் நேற்று நடந்தது. இதில், பங்கேற்ற பாதுகாப்புத் துறை அமைச்சர் ராஜ்நாத் சிங், சன் டி.வி. செயல் இயக்குநர் காவேரி கலாநிதி மாறனுக்கு கேடயம் அளித்து கவுரவித்தார். கொடி நாள் நிதிக்கு அதிக நன்கொடை அளித்த ஸ்டேட் வங்கி, ஏர்போர்ட்ஸ் அத்தாரிட்டி ஆஃப் இந்தியா, எல்.ஜி., கோல் இந்தியா உள்ளிட்ட நிறுவனங்களும் நிகழ்ச்சியில் கவுரவிக்கப்பட்டன. முன்னாள் படைவீரர்களுக்காக கொடி நாள் நிதி வழங்கிய சன் டி.வி., புயல், கொரோனா பரவல், பூகம்பம் போன்ற பேரிடர் நிகழ்வுகளின்போதும் பல்வேறு அமைப்புகளுக்கு நிதி உதவி அளித்திருக்கிறது. அத்துடன், ஏழை, எளிய மக்களுக்கான நலத் திட்டங்களுக்காகவும் சன் டி.வி. பல ஆண்டுகளாக தொடர்ந்து நிதி உதவி அளித்து வருவது குறிப்பிடத்தக்கது.

Related Stories: