ஐயப்ப பக்தர்கள் சீசன் துவக்கம்: பழநியில் விற்பனைக்கு தயாராகும் குஜராத் பொம்மைகள்

பழநி: பழநியில் ஐயப்ப பக்தர்கள் சீசன் துவங்கிய சூழ்நிலைககு குஜராத் மாநில பொம்மைகள் விற்பனைக்கு தயாராகி வருகின்றன. திண்டுக்கல் மாவட்டம், பழநி கோயிலில் தற்போது ஐயப்ப பக்தர்கள் சீசன் துவங்கி உள்ளது. தொடர்ந்து  தைப்பூசம், பங்குனி உத்திரம், கோடை விடுமுறை காலம் என வைகாசி மாதம் வரை  பக்தர்கள் கூட்டம் இருந்து கொண்டே இருக்கும். இவ்வாறு வரும் பக்தர்களிடம்  வியாபாரம் செய்வதற்காக அடிவார பகுதியில் ஏராளமான கடைகள் உள்ளன. உள்ளூர்  வியாபாரிகள் மட்டுமின்றி, வெளியூர்களில் இருந்தும், வெளிமாநிலங்களில்  இருந்தும் ஆயிரக்கணக்கான வியாபாரிகள் பழநி நகரில் குவிந்துள்ளனர்.

இது போன்று குஜராத் மாநிலத்தில் இருந்தும் பழநி வந்துள்ள வெளிமாநில  வியாபாரிகள் சிவகிரிப்பட்டி பைபாஸ் சாலையில் டெண்ட் அமைத்து தங்கி உள்ளனர்.  அங்கு பிளாஸ் ஆப் பாரீஸ் வகை மாவினால் செய்யப்பட்ட சாமி சிலைகள்,  பொம்மைகள், வீட்டு அலங்கார பொருட்கள் தயாரிக்கப்பட்டு வருகின்றன. பல்வேறு  வண்ணங்களில் தயாரிக்கப்படும் இப்பொருட்களுக்கு பக்தர்களிடம் நல்ல வரவேற்பு  கிடைத்துள்ளது. பக்தர்கள் ஆர்வமுடன் வாங்கிச் செல்கின்றனர்.

இதுகுறித்து  குஜராத் மாநிலத்தில் இருந்து வந்துள்ள கேசி கூறியதாவது: பல்வேறு  வண்ணங்களில் பொம்மைகள் மற்றும் அலங்கார பொருட்கள் தயாரிக்கிறோம். ரூபாய்  100 துவங்கி ரூபாய் 2 ஆயிரம் வரை பல்வேறு அளவுகளில் பொருட்கள் தயார்  செய்கிறோம். சுற்றுச்சூழல் மாசுபாடு இல்லாத பொருள் என்பதால் பக்தர்களும்  ஆர்வமுடன் வாங்கிச் செல்கின்றனர். மே மாதம் வரை இங்கிருப்போம். பின்,  அடுத்த ஊருக்குச் சென்றுவிடுவோம். அடுத்த சீசனுக்கு மீண்டும் வந்து  விடுவோம். இவ்வாறு அவர் கூறினார்.

Related Stories: