வேலூர் ஜலகண்டேஸ்வரர் கோயிலில் தேங்கி நிற்கிறது ஷட்டரை உடைத்து தண்ணீரை வெளியேற்ற நடவடிக்கை: நவீன கேமரா மூலம் ஆய்வு

ேவலூர்: ஜலகண்டேஸ்வரர் கோயிலில் தேங்கும் அகழி நீரை ஷட்டர் உடைத்து வெளியேற்றுவதற்கான நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.இப்பணிகளை இன்று ஆய்வு செய்த கலெக்டர் துரிதப்படுத்த உத்தரவிட்டார். வேலூர் கோட்டை அகழியின் நீர்மட்டம் தொடர் மழை காரணமாக அதிகரித்துக்கொண்டே உள்ளது. ஜலகண்டேஸ்வரர் கோயில் வளாகத்தில் உள்ள தாமரை குளம், அபிஷேக கிணறு ஆகியவை முழுமையாக நிரம்பி வழிகிறது. இதனால் அகழியின் உபரிநீர் கோயில் வளாகத்தில் தேங்கியுள்ளது. கடந்த 3 வாரங்களாக கோயில் முழுவதும் தண்ணீர் தேங்கி நிற்கிறது. நேற்று முன்தினம் கோயில் கருவறையிலும் தண்ணீர் புகுந்தது.

இதனால் பக்தர்கள் கோயிலுக்குள் செல்ல அனுமதி மறுக்கப்பட்டது. மேலும் மூலவருக்கு வழக்கமான அபிஷேக, அலங்கார ஆராதனைகளை முடித்துவிட்டு உற்சவ மூர்த்திகளை ராஜகோபுரத்தின் கீழே நந்தீஸ்வரர் வாகனத்தின் மீது வைத்து பக்தர்கள் தரிசிக்க அனுமதித்தனர். இந்நிலையில் கடந்த ஒரு வாரமாக கோயிலில் தேங்கியுள்ள தண்ணீரை கால்வாய் மூலம் வெளியேற்ற நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டன. ஆனால் தண்ணீர் வெளியேற்ற முடியவில்லை. கோட்டை அகழியில் தண்ணீர் அதிகரித்தால் அதனை வெளியேற்றும் வகையில் ஷட்டருடன் கூடிய கால்வாய் அமைக்கப்பட்டிருந்தது தெரியவந்தது. ஆனால் கடந்த 30 ஆண்டுகளாக அதனை சீரமைக்காததால் கால்வாயின் இருப்பிடம் உடனடியாக தெரியாமல் அதிகாரிகள் திணறினர். இருப்பினும் நீண்ட போராட்டத்திற்கு பிறகு கால்வாயை கண்டறிந்தனர்.

இருப்பினும் எத்தனை அடி ஆழத்தில் கால்வாயின் ஷட்டர் உள்ளது என்பதை கணக்கிட்டு அதனை எவ்வாறு திறப்பது என மாநகராட்சி அதிகாரிகள் மற்றும் நீர் மேலாண்மைத்துறை அதிகாரிகள் இன்று ஆய்வு மேற்கொண்டனர். இதற்காக நவீன கேமராவை  இறக்கி  ஆய்வு செய்தனர். இதனை கலெக்டர் குமாரவேல் பாண்டியன் பார்வையிட்டார். அப்போது கலெக்டரிடம் பேசிய மாநகராட்சி மற்றும் நீர்வளத்துறை அதிகாரிகள், ‘அகழியில் உள்ள ஷட்டரை உடைக்க தொல்லியல் துறையினர் அனுமதி தர மறுத்து காலதாமதம் செய்கின்றனர். இதனால் எவ்வளவு ஆழத்தில் ஷட்டர் உள்ளது என்பதை கண்டறிவதிலும் தண்ணீரை வெளியேற்றுவதிலும் தாமதம் ஏற்படுகிறது’ என தெரிவித்தனர்.

அதற்கு கலெக்டர், உடனடியாக தீயணைப்பு வீரர்களை வரவழைத்து ஆழம் கணக்கிட்டு வால்வை திறக்க என்ன வழி என யோசித்து திட்டமிடுங்கள் என ஆலோசனை வழங்கினார். மேலும் ஷட்டரை திறக்க முடியாத பட்சத்தில், கால்வாயின் பக்கவாட்டில் துளையிட்டு அகழிநீரை வெளியேற்றலாம். இதில் தாமதம் வேண்டாம் என்றார். இதையடுத்து பணிகள் தீவிரமாக நடந்து வருகிறது. இதனிடையே அகழிக்கரையில் நடந்துவரும் பணிகளை எம்எல்ஏ கார்த்திகேயன் ஆய்வு செய்தார். அப்போது மாநகராட்சி செயற்பொறியாளர் கண்ணன், நீர்வளத்துறை உதவி செயற்பொறியாளர் விஸ்வநாதன் ஆகியோர் உடனிருந்தனர்.

Related Stories: