ஆற்றில் அடித்துச் செல்லப்பட்டவரை மீட்பதில் மெத்தனம்: அதிகாரிகளை கண்டித்து உறவினர்கள் சாலை மறியல்-போக்குவரத்து பாதிப்பு

உளுந்தூர்பேட்டை: உளுந்தூர்பேட்டை அருகே ஆற்றில் அடித்துச்செல்லப்பட்டவரை மீட்பதில் அதிகாரிகளின் மெத்தனப்போக்கை கண்டித்து உறவினர்கள் சாலைமறியலில் ஈடுபட்டனர். இதனால் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. பின்னர் போலீசார் பேச்சுவார்த்தை நடத்தி கலைந்து போகச்செய்தனர். கள்ளக்குறிச்சி மாவட்டம் உளுந்தூர்பேட்டை அருகே உள்ள கிளியூர் கிராமத்தை சேர்ந்த கிளியான் (49), சங்கர்(53) முருகன் (42) ஆகிய 3 பேரும்  கிளியூர் கிராமத்தில் துக்க நிகழ்ச்சி முடித்து விட்டு கடந்த 2 நாட்களுக்கு முன்பு பெங்களூர் நோக்கி காரில் சென்று கொண்டிருந்தனர்.  

அப்போது திருக்கோவிலூர் அருகே மொகலார் - பழங்கூர் கிராமத்திற்கு இடையிலான தரைப்பாலத்தில் அதிக அளவிலான தண்ணீர் வெள்ளப்பெருக்கு சென்றதால் காரில் சென்றவர்கள் அடித்துச் செல்லப்பட்டனர்.

இதில் கிளியான் மற்றும் சங்கர் ஆகியோர் உயிரோடு மீட்கப்பட்ட நிலையில் முருகன் இன்னும் கிடைக்கவில்லை. கடந்த இரண்டு நாட்களாக இவரை தேடும் பணி நடைபெற்று வரும் நிலையில் முருகனை தேடுவதில் அதிகாரிகள் மெத்தனமாக இருப்பதாக உறவினர்கள், பொதுமக்கள் குற்றம் சாட்டி வருகின்றனர். அவர்கள் இன்று காலை கிளியூர் கிராமத்தில் உள்ள அதே கிராமத்தில் திடீர் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். 200க்கும் மேற்பட்டோர் இதில் கலந்து கொண்டனர்.

இதனால் அந்த பகுதியில் போக்குவரத்து முற்றிலும் தடைப்பட்டது. இது குறித்து தகவல் அறிந்ததும் சம்பவ இடத்திற்கு சென்ற திருநாவலூர் காவல் நிலைய போலீசார் போராட்டத்தில் ஈடுபட்டவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். விரைந்து உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதி அளித்ததை அடுத்து அனைவரும் கலைந்து சென்றனர். இந்த சம்பவம் உளுந்தூர்பேட்டை பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Related Stories: