ஆவுடையானூரில் அதிகபாரம் ஏற்றி வந்த லாரி மோதி மின்கம்பம் உடைந்தது

பாவூர்சத்திரம்: ஆவுடையானூரில் அதிக பாரம் ஏற்றி வந்த லாரி மோதி மின்கம்பம் உடைந்தது. பாவூர்சத்திரம் அருகே உள்ளது ஆவுடையானூர். இங்கு அரிசி ஆலைகள், எண்ணெய் ஆலைகள் உள்ளிட்ட பல்வேறு ஆலைகள் உள்ளன. இந்த ஆலைகளுக்கு மூல பொருட்கள் தமிழகத்தில் உள்ள பல்வேறு மாவட்டங்களில் இருந்தும், வெளி மாநிலங்களில் இருந்தும் கொண்டுவரப்படுகிறது.  இவ்வாறு மூலப்பொருட்கள் கொண்டு வரும் லாரிகள் அளவுக்கு அதிகமான பாரம் ஏற்றி வருகின்றன. நேற்று ஆவுடையானூரில் உள்ள ஆலை ஒன்றுக்கு அதிகமான பொருட்கள் ஏற்றி வந்த லாரி உரசியதில் மின்கம்பம் உடைந்து விழுந்தது.

இது தொடர்பாக பொதுமக்கள் ஆவுடையானூரில் உள்ள மின்வாரிய அலுவலகத்திற்கு தகவல் தெரிவித்தனர். உடனடியாக மின்வாரிய ஊழியர்கள் அந்த பகுதியில் மின் வினியோகத்தை நிறுத்தி புதிய மின் கம்பம் கொண்டுவந்து அந்த இடத்தில் நட்டு மின் வினியோகத்தை சீர் செய்தனர். மிகவும் துரிதமாக செயல்பட்ட மின்வாரிய ஊழியர்களை பொதுமக்கள் பாராட்டினர். இதுகுறித்து பொதுமக்கள் கூறுகையில், ‘கிராமங்களுக்குள் பாரம் ஏற்றி வரும் லாரிகள் கவனமாகவும், மின் வயர்கள் இருக்கிறதா? என்று பார்த்து வர வேண்டும்.

அதிக பாரம் ஏற்றி வரும் லாரிகளை சம்பந்தப்பட்ட அதிகாரிகள் கண்காணித்து நடவடிக்கை எடுக்க வேண்டும்’ என்றனர்.

Related Stories: