நாகர்கோவில் சாலைகளில் சுற்றி திரியும் மாடுகளை பிடிக்கும் பணி தொடக்கம்: கோசாலையில் ஒப்படைப்பு

நாகர்கோவில்: நாகர்கோவில் மாநகர சாலைகளில் சுதந்திரமாக சுற்றி திரிந்த மாடுகளை மாநகராட்சி ஊழியர்கள் இன்று காலை பிடித்து கோசாலையில் ஒப்படைத்தனர். நாகர்கோவில் மாநகர பகுதியில் மாடு வளர்ப்பவர்கள் அவற்றை சாலையில் விட்டுவிட்டு சென்று விடுகின்றனர். இதனால் வடசேரி, பாலமோர் சாலை, நாகராஜா கோயில்  ரதவீதிகள், புத்தன்பங்களா சாலை, கோட்டாறு உள்பட பல்வேறு பகுதிகளில் ஏராளமான மாடுகள் சுதந்திரமாக சுற்றி திரிகின்றன. இது போக்குவரத்துக்கு கடும் இடையூறாக உள்ளது. போலீசார் விரட்டினாலும் மாடுகள் அங்கிருந்து செல்வது இல்லை. மாறாக விரட்டிய போலீசாரை குறிவைத்து முட்ட வருகிற சம்பவங்களும் நாகர்கோவிலில் அரங்கேறி உள்ளன.

காலை மற்றும் மாலையில் பால் கறக்கும் நேரத்தில் எஜமானர்களின் வீட்டிற்கு சென்று பால்தந்து விட்டு, மீண்டும் சாலைகளுக்கு வந்து விடுகின்றன. இந்த மாடுகளுக்கு மார்வாடிகள், அறுசுவை உணவுகள் வழங்கி பூஜிப்பதால், மாடுகள் வீடுகளில் இருப்பதை விட சாலைகளில் வருவதையே அதிகம் விரும்புகின்றன. நாகர்கோவில் மாநகராட்சி நிர்வாகம் மாடுகளை பிடிக்கும் போது ஓடிவரும் அதன் உரிமையாளர்கள், அதிகாரிகளிடம் கெஞ்சிபேசி மாடுகளை அழைத்து செல்கின்றனர். பின்னர் மீண்டும் சில நாட்களில் வெளியே விடுவதும், வாடிக்கையாகி விட்டது. சாலைகளில் திரியும் மாடுகள் வாகனங்களில் சிக்கி விபத்தில் காயம் பட்டாலோ அல்லது உயிர் இழந்து விட்டாலோ அதன் உரிமையாளர்கள் வருவதில்லை.

தற்போதும் மாடுகள் அதிக எண்ணிக்கையில் சாலைகளில் சுற்றி திரிகின்றன. இதனையடுத்து மாநகராட்சி நிர்வாகம், ஜீவகாருண்யா அமைப்பு ஆகியவை சார்பில், மாடுகளை பிடிக்கும் பணி இன்று காலை தொடங்கியது. ஆணையர் அஷா அஜித் உத்தரவின் பேரில், மாநகர் நல அலுவலர் விஜய் சந்திரன் கண்காணிப்பில், மாடுகளை பிடிக்கும் பணி தொடங்கி உள்ளன. வழக்கமாக மாடுகளை பிடிக்கும்போது, உரிமையாளர்கள் அபாராதம் செலுத்தி விட்டு, மீண்டும் சாலைகளிலேயே விட்டு விடுவதால், இந்த முறை பிடிபடும் மாடுகளை, கலெக்டரின் கண்காணிப்பில் உள்ள  குமாரகோயிலில் உள்ள கோசாலையில் கொண்டு பராமரிக்க ஆணையர் ஆஷா அஜித் உத்தரவிட்டுள்ளார்.

Related Stories:

More