சிமெண்ட், இரும்பு கம்பிக்கு ஜி.எஸ்.டி.-யை ரத்து செய்யுங்கள்: நாகர்கோவிலில் நடைபெற்ற கட்டுமான தொழிலாளர்கள் போராட்டத்தில் 150க்கும் மேற்பட்டவர்கள் கைது..!!

குமரி: நாகர்கோவிலில் நடைபெற்ற கட்டுமான தொழிலாளர்கள் மறியல் போராட்டத்தில் 150க்கும் மேற்பட்டவர்கள் கைது செய்யப்பட்டனர். கட்டுமான பொருட்களின் விலையை கட்டுப்படுத்த ஜி.எஸ்.டி. வரியை குறைத்திட வேண்டும். கட்டுமான தொழிலாளர் நலவாரிய சட்டங்களை திருத்த கூடாது போன்ற கோரிக்கைகளை வலியுறுத்தி கட்டுமான தொழிலாளர்கள் நாடு முழுவதும் இன்று வேலைநிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். இதன் ஒருபகுதியாக கன்னியாகுமரி மாவட்டத்தில் கட்டுமான தொழிலாளர்கள் 16 இடங்களில் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். நாகர்கோவில் வடசேரி கிராம அலுவலகம் முன்பு நடைபெற்ற மறியல் போராட்டத்தில் 150க்கும் மேற்பட்டவர்கள் கலந்துக்கொண்டனர்.

திருவனந்தபுரம் சாலையில் மறியலில் ஈடுபட்டவர்களை போலீசார் கைது செய்தனர். இதேபோல தேனி மாவட்ட கட்டுமான தொழிலாளர்கள் சங்கம் சார்பில் ஒன்றிய அரசை கண்டித்தும் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தியும் மறியல் போராட்டம் நடைபெற்றது. வ.உ.சி. திடலில் சாலையில் அமர்ந்து மறியலில் ஈடுபட்ட சுமார் 500க்கும் மேற்பட்டவர்களை காவல்துறையினர் கைது செய்து தனியார் திருமண மண்டபத்தில் அடைத்தனர். ஒன்றிய அரசின் ஜி.எஸ்.டி. வரியால் கட்டுமான தொழில் முடங்கி கிடப்பதால் சிமெண்ட், இரும்பு கம்பி உள்ளிட்ட கட்டுமான பொருட்களுக்கு ஜி.எஸ்.டி. வரியை ரத்து செய்திடக்கோரி தஞ்சையில் 200க்கும் மேற்பட்ட கட்டுமான தொழிலாளர்கள் பேரணி நடத்தினர்.

தஞ்சை புது ஆற்றுப்பாலத்தில் இருந்து 200க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் கண்டன முழக்கத்துடன் பேரணியாக புறப்பட்டு சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். போலீசார் அனைவரையும் கைது செய்தனர். மேலும் போராட்டத்தின் போது நலவாரிய சட்டத்தை ஒன்றிய அரசு சீரடிப்பதை கண்டித்தும் 44 நலவாரிய சட்டங்களை 4 சட்டமாக குறுக்குவதை கண்டித்தும் போராட்டத்தில் முழக்கங்களை எழுப்பினர். இதேபோன்று வேலைநிறுத்தம் மற்றும் சாலை மறியல் போராட்டங்கள் தமிழ்நாட்டின் பல்வேறு நகரங்களில் நடந்தது.

Related Stories: