செயற்கை கருத்தரித்தல் நடைமுறைக்கு புதிய கட்டுப்பாடுகள்: நாடாளுமன்றத்தில் மசோதா தாக்கல்

டெல்லி: தொழில்நுட்ப அடிப்படையிலான மகப்பேறு சிகிச்சைக்கான ஒழுங்குமுறை மசோதா நாடாளுமன்ற மக்களவையில் நிறைவேறியுள்ளது. செயற்கை கருத்தரித்தல் மருத்துவ சேவையில் மிகப்பெரிய மாற்றங்களை இம்மசோதா கொண்டுவருகிறது. உணவு முறையில் மாற்றம், சூழல் சார்ந்த மாற்றங்கள் என பல்வேறு காரணிகளால் பெண்கள் இயல்பாக கருத்தரிப்பதில் பல்வேறு சிக்கல்கள் தற்போது உருவாகியுள்ளது. இதனால் பலர் குழந்தை பெற்றுக்கொள்வதற்காக ஐவிஎஃப் உள்ளிட்ட மருத்துவ தொழில்நுட்பங்களின் உதவியை நாடுகின்றனர். இதனால் நாடு முழுவதும் செயற்கை கருத்தரித்தலின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. இவற்றில் பல மையங்கள் எவ்வித கட்டுப்பாடுகளும் இன்றி விதிமுறைகளை பின்பற்றாமல் செயல்படுவதாக குற்றச்சாட்டுகளும் உள்ளன. இதையடுத்து தொழில்நுட்ப அடிப்படையிலான மகப்பேறு சிகிச்சை வழங்கும் சேவைகளை ஒழுங்குபடுத்தும் சட்ட மசோதாவை நாடாளுமன்ற மக்களவை நிறைவேற்றியுள்ளது.

செயற்கை கருத்தரிப்பு சிகிச்சை மையங்களுக்கான விதிகளை வகுத்து அவற்றை நெறிகளுக்கு உட்பட்டு பாதுகாப்பான சேவையை வழங்குவதை இம்மசோதா உறுதிப்படுத்துகிறது. இம்மசோதாவின் படி இனி எல்லா கருத்தரிப்பு சிகிச்சை மையங்களும் பதிவு செய்யப்பட வேண்டும். பதிவு செய்யப்பட தகுதியான சிகிச்சை மையங்களின் குறைந்தபட்ச தரத்தினை வகுக்க மத்திய அரசினால் தேசிய வாரியம் அமைக்கப்படும். மேலும் கருமுட்டைகள், விந்தணுக்கள் தானம் செய்வோருக்கான அடிப்படை தகுதி அவர்கள் எத்தனை முறை தானம் வழங்கலாம் போன்றவையும் இம்மசோதாவில் வரையறுக்கப்பட்டுள்ளது. ஆண் அல்லது பெண் குழந்தை வேண்டும் என திட்டமிட்ட கருத்தரிப்பு, கருமுட்டைகள், விந்தணுக்கள் விற்பனை, செயற்கை முறையில் கருத்தரித்த குழந்தைகளை கைவிடுதல் அல்லது அவர்களை முறையாக பராமரிக்காமல் இருந்தால் செயற்கை கருவுறுதலை தேர்ந்தெடுக்கும் இணையரை ஏமாற்றுதல், தானம் அளிப்பவரை ஏமாற்றுதல் போன்றவை சட்ட விரோதமாக கருதப்படும். இந்த குற்றங்களில் ஈடுபட்டால் 5 முதல் 12 ஆண்டுகள் சிறை தண்டனையும், 5 லட்சம் முதல் 25 லட்சம் வரை அபராதமும் விதிக்கப்படும்.

Related Stories: