பொழுதுபோக்கு பூங்காவில் ராட்டின விபத்தில் சிறுமி உயிரிழந்த விவகாரத்தை மீண்டும் விசாரிக்க சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு

சென்னை: பொழுதுபோக்கு பூங்காவில் ஏற்பட்ட ராட்டின விபத்தில் சிறுமி உயிரிழந்த விவகாரத்தை மீண்டும் விசாரிக்க சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. சென்னை கிழக்கு கடற்கரை சாலையில் உள்ள தனியார் பொழுதுபோக்கு பூங்காவிற்கு கடந்த 2016ஆம் ஆண்டு காஞ்சிபுரம் கழிப்பட்டூரை சேர்ந்த பாபு என்பவர் தனது மனைவி மற்றும் மகள்களுடன் சென்றுள்ளார். அப்போது அங்கிருந்த வேவ் சில்வர் என்ற ராட்டின விளையாட்டில் செல்வதற்காக அவரது மனைவியும் இளைய மகளும் சென்றுள்ளனர். ராட்டினம் சரியான முறையில் இயக்கப்படாததால் அதில் அமர்ந்திருந்த இருவரும் தூக்கி எறியப்பட்ட நிலையில் அவரது இளைய மகள் தலையில் காயமடைந்து உயிரிழந்தார், அவரது மனைவி பலத்த காயம் அடைந்தார்.

இந்நிலையில் இந்த சம்பவம் தொடர்பாக உரிய விசாரணை நடத்த வேண்டும் என்று நீலாங்கரை காவல் நிலையத்தில் புகார் அளித்தும் அந்த விசாரணை முறையாக நடைபெறவில்லை. பொழுதுபோக்கு பூங்காவிற்கு ஆதரவாக விசாரணை சென்று கொண்டிருப்பதாகவும் இதுதொடர்பான வழக்கை விரைந்து விசாரிக்கவும், முறையாக குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்ய வேண்டும் என்று வழக்கு தொடரப்பட்டது. அந்த வழக்கு விசாரணைக்கு வந்த போது வழக்கை விசாரித்த நீதிபதி டிஎஸ்பி அந்தஸ்தில் முறையாக ஒரு அதிகாரியை விசாரணைக்கு நியமிக்க வேண்டும். அடுத்த 12 வாரத்திற்குள் அவர் விசாரணையை முடிக்க வேண்டும் என்றும் உத்தரவிடப்பட்டது. குழந்தையின் இழப்பீடு தொடர்பாக தமிழ்நாடு மாநில சட்டப்பணிகள் ஆணையத்தை மனுதாரர் பாபு 4 வாரத்தில் அணுகி நிவாரணம் தேடிக்கொள்ளலாம் எனவும் அறிவுறுத்தல் வழங்கியுள்ளார்.

Related Stories: