காற்று மாசால் பெரியவர்கள் வீட்டிலிருந்தே வேலை செய்ய வேண்டும்; ஆனால் குழந்தைகள் பள்ளிக்கு செல்ல வேண்டுமா?: டெல்லி அரசை கண்டித்த சுப்ரீம் கோர்ட்..!!

டெல்லி: டெல்லியில் காற்று மாசை கட்டுப்படுத்துவது குறித்து 24 மணி நேரத்தில் உரிய திட்டத்தை அரசு உருவாக்க வேண்டும் என்று உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. டெல்லியில் காற்று மாசு அதிகரித்து வருவது தொடர்பான வழக்கை விசாரித்த உச்சநீதிமன்றம் மாநில மற்றும் ஒன்றிய அரசுக்கு சரமாரி கேள்விகளை எழுப்பியுள்ளது. காற்று மாசு தொடர்ந்து அதிகரித்து வரும் நிலையில், அதனை கட்டுப்படுத்த எந்த நடவடிக்கையும் மேற்கொண்டதாக தெரியவில்லை என்று உச்சநீதிமன்றம் சாடியுள்ளது. மேலும் காற்று மாசை கட்டுப்படுத்த அமைக்கப்பட்ட குழுவின் நிலை என்ன? என்று கேள்வி எழுப்பிய நீதிபதிகள், காற்றின் தரம் குறைவதற்கு முக்கிய காரணம் எது என்பதை கண்டறிந்தார்களா? என்றும் வினவினர்.

எத்தனை விதிமீறி செயல்படும் தொழிற்சாலைகள் இதுவரை மூடப்பட்டுள்ளன? என்று அடுக்கடுக்கான கேள்விகளை எழுப்பினர். அரசு நடவடிக்கை எடுத்தது என்றால் ஏன்? மாசு தொடர்ந்து அதிகரித்து வருகிறது என்று கேள்வி கேட்ட நீதிபதிகள், அரசிடம் இருந்து தங்களுக்கு தரவுகள் தேவையில்லை; தீர்வுகளே தேவை என்றனர். பெரியவர்கள் வீட்டில் இருந்தே பணியாற்றி வரும் நிலையில், 3, 4 வயது குழந்தைகள் பள்ளிக்கு செல்வதை காணமுடிவதாக கூறிய நீதிபதிகள், காற்று மாசு அதிகரிக்கும் நிலையில் பள்ளிகளை மட்டும் திறந்தது ஏன்? என்று கடுமையாக சாடினர்.

எங்களை உத்தரவுகள் பிறப்பிக்க வைக்க வேண்டாம்; எல்லாவற்றையும் நாங்கள் உங்களுக்கு சொல்லி கொண்டே இருக்க வேண்டுமா? என்றும் நீதிபதிகள் தெரிவித்தனர். தொடர்ந்து, காற்று மாசை கட்டுப்படுத்த 24 மணி நேரத்திற்குள் அரசு உரிய திட்டத்தை உருவாக்கவில்லை என்றால் உச்சநீதிமன்றம் கடுமையான உத்தரவுகளை பிறப்பிக்க நேரிடும் என்றும் எச்சரித்துள்ளனர். இதனிடையே நாளை முதல் டெல்லியில் காலவரையின்றி பள்ளிகளுக்கு விடுமுறை என்று சுற்றுச்சூழல் அமைச்சர் கோபால் ராய் தெரிவித்திருப்பது குறிப்பிடத்தக்கது.

Related Stories: