ஆவடி அருகே வெள்ளானூரில் ஆக்கிரமிப்பு கடைகள் இடிப்பு

ஆவடி: ஆவடி அருகே வெள்ளானூரில் மழைநீர் தடையின்றி செல்ல வசதியாக சாலையோரத்தில் கட்டப்பட்டிருந்த 10க்கு மேற்பட்ட கடைகளை வருவாய்த்துறை அதிகாரிகள் அகற்றினர். ஆவடியை அடுத்த வெள்ளானூர், அலமாதி சாலையில், சாலையின் இருபுறமும் ஆக்கிரமித்து கடைகள் கட்டப்பட்டுள்ளன.  இதனால் போக்குவரத்து பாதிக்கப்பட்டுவந்தது. இந்த நிலையில், தற்போது பெய்துவரும் பருவ மழையால் தண்ணீர் செல்ல முடியாமல் குடியிருப்புகளில் தண்ணீர் புகுந்துவிட்டதால் குடியிருப்புவாசிகள் கடும் அவதிப்பட்டனர். இதுகுறித்து மாவட்ட கலெக்டர் ஆல்பி ஜான் வர்கீசுக்கு ஏராளமான புகார்கள் சென்றன.

இந்த நிலையில், கலெக்டர் உத்தரவின்படி, நேற்று காலை திருவள்ளூர் ஆர்டிஓ ரமேஷ், ஆவடி தாசில்தார் ரஜினிகாந்த், வருவாய் ஆய்வாளர் ஜனனி, கிராம நிர்வாக அதிகாரி மோகனரங்கன் ஆகியோர் சம்பவ இடத்துக்கு வந்து ஆய்வு மேற்கொண்டனர். சாலையின் இருபுறங்களிலும் ஆக்கிரமித்து மழைநீர் செல்லாதபடி கடைகளில் முகப்புகள் இருந்தது தெரியவந்தது. இதையடுத்து 5 ஜேசிபி இயந்திரங்கள் மூலம் 10க்கு மேற்பட்ட கடைகளின் முகப்புகள் இடிக்கப்பட்டன. மழைநீர் செல்லும் வகையில் தற்காலிக கால்வாயும் தோண்டப்பட்டது. ஆக்கிரமிப்பு அகற்றும் பணிகள் இன்றும் தொடர்ந்து நடைபெறும் என்று அதிகாரிகள் தெரிவித்தனர்.

Related Stories:

More