காக்களூர் ஏரியில் ஆக்கிரமிப்பு; வீடு, கடைகள் அதிரடி அகற்றம்

திருவள்ளூர்: திருவள்ளூர் அருகே காக்களூர் ஏரியில் ஆக்கிரமித்து கட்டப்பட்டிருந்த கட்டிடங்கள் இடிக்கப்பட்டது. திருவள்ளூர் அருகே காக்களூர் ஊராட்சியில் 10 ஆயிரத்துக்கு மேற்பட்டவர்கள் வசித்து வருகின்றனர். இந்த பகுதியில் தொடர்ந்து பெய்த கனமழையால் காக்களூர் ஏரி நிரம்பி மழைநீர் செல்ல வழியின்றி பல்வேறு குடியிருப்புகளில் வெள்ளம் சூழ்ந்தது. இதனால் மக்கள் வீட்டைவிட்டு வெளியே வரமுடியாமல் தவித்தனர். இதையடுத்து அப்பகுதி பொதுமக்கள் திருவள்ளூர் மாவட்ட ஆட்சியர் ஆல்பி ஜான் வர்கீஸிடம் புகார் செய்தனர். இதையடுத்து வட்டாட்சியர், பொதுப்பணித்துறை அதிகாரிகள், ஊரக வளர்ச்சித் துறை அதிகாரிகள் நேரில் ஆய்வு செய்து நடவடிக்கை எடுக்க மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டார்.

இந்த நிலையில், காக்களூர் ஊராட்சி ஏரியின் கடைமடை வழியாக உபரி நீர் செல்லும் கால்வாய் ஆக்கிரமிப்புகளை அகற்றி குடியிருப்பு பகுதிகளில் தேங்கியுள்ள தண்ணீரை அப்புறப்படுத்த அதிகாரிகள் முடிவு செய்தனர். இதையடுத்து வட்டாட்சியர் ஏ.செந்தில்குமார், பொதுப்பணித்துறை உதவி பொறியாளர் செல்வராணி, வட்டார வளர்ச்சி அலுவலர் இரா.வெங்கடேசன், வருவாய் ஆய்வாளர் கணேஷ், கிராம நிர்வாக அலுவலர் கிருஷ்ணன் ஆகியோர் வரைபட உதவியுடன் சம்பவ இடத்துக்கு வந்து ஆய்வு செய்தனர். இதில், காக்களூர் ஏரிக்கரை சாலையோரம் தண்ணீர் செல்லும் கால்வாயை ஆக்கிரமித்து பிரியாணி கடை, இறைச்சிக் கடைகள், குடியிருப்புகள் கட்டப்பட்டுள்ளது தெரியவந்தது. இதையடுத்து ஜேசிபி மூலம் கால்வாயை ஆக்கிரமித்து கட்டப்பட்டிருந்த கட்டிடங்களை அகற்றினர். அசம்பாவிதம் ஏற்படாமல் இருக்க போலீசார் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.

Related Stories:

More