காட்டாற்று வெள்ளத்தால் தீவுகளான 5 கிராமங்கள் இடுப்பளவு தண்ணீரில் மாணவர்களை தோளில் சுமந்து செல்லும் பெற்றோர்: கமுதி அருகே ‘பாச வெள்ளம்’

சாயல்குடி: கமுதி அருகே காட்டாற்று வெள்ளத்தில் தரைப்பாலம் மூழ்கியதால், 5 கிராமங்களை சேர்ந்த மக்கள் போக்குவரத்தின்றி முடங்கினர். தரைப்பாலத்தை கடக்க பள்ளி மாணவர்களை, பெற்றோர் தோளில் தூக்கி செல்லும் அவல நிலை உள்ளது.வைகை அணையிலிருந்து ராமநாதபுரம் மாவட்டத்திற்கு கடந்த நவ. 27ம் தேதி தண்ணீர் திறந்து விடப்பட்டது. இந்நீரானது தற்போது பரளையாறு வழியாக கிருதுமால் நதி ஓடை, குண்டாறு வழித்தடங்களில் சென்று காட்டாறு வெள்ளமாய் ஓடுகிறது. இதனால் குண்டாறு வழித்தடத்தில் உள்ள அனைத்து சாலைகள், தரைப்பாலங்கள் மூழ்கின. கமுதி அருகே செய்யாமங்கலம், தாதனேந்தல், பிரண்டைகுளம், புதுப்பட்டி, முனியனேந்தல் ஆகிய 5 கிராமங்களுக்கு கமுதி - பார்த்திபனூர் சாலை விலக்கிலிருந்து தரைப்பாலம் வழியாக பிரதான சாலை செல்கிறது.இக்கிராமங்களை சேர்ந்த மக்கள் இந்த வழித்தடத்தைத்தான் பயன்படுத்தி வருகின்றனர். காட்டாற்று வெள்ளத்தால் தரைப்பாலத்தில் ஏறக்குறைய இடுப்பளவுக்கு தண்ணீர் செல்கிறது. இதனால் தரைப்பாலம் மூழ்கியது.

கிராமங்களும் தனித்தீவுகளாக மாறிப்போயின. இதனால் பொதுமக்கள் அத்தியாவசிய பொருட்கள், மருத்துவமனை உள்ளிட்ட அவசர தேவைகளுக்கு கூட கமுதி உள்ளிட்ட வெளியூர் செல்ல முடியாமல் கிராமத்திலேயே முடங்கும் நிலை ஏற்பட்டுள்ளது.கனமழை எச்சரிக்கையை தொடர்ந்து விடப்பட்ட விடுமுறை நேற்று முன்தினம் முடிந்தது. இதனால் வழக்கம்போல் நேற்று பள்ளி, கல்லூரிகள் திறக்கப்பட்டன. மாணவர்கள் செய்யாமங்கலம் விலக்கு ரோட்டிற்கு செல்ல வேண்டும் என்பதால், பாலத்தில் கயிறை கட்டி பெற்றோர் தங்களது பிள்ளைகளை தோளில் தூக்கிச்சென்று கரையை கடத்தி விட்டனர். அவசர தேவை மற்றும் விவசாய பணிக்கு சென்ற பொதுமக்களும் கயிறின் துணையோடுதான் ஆற்றை கடந்து செல்கின்றனர். ஆற்றில் தண்ணீர் வரும்போதெல்லாம் இதுபோன்ற அவலம் பல ஆண்டுகளாக தொடர்வதால், தமிழக அரசு உயர்மட்ட மேம்பாலம் அமைத்து தர வேண்டும என செய்யாமங்கலம் உள்ளிட்ட 5 கிராம மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Related Stories: