ஹைவேவிஸ் பகுதியில் யானைக்கூட்டம் முகாம்: மலைக்கிராம மக்கள் பீதி

சின்னமனூர்: ஹைவேவிஸ், மேகமலை பகுதியில் யானைக்கூட்டம் முகாமிட்டுள்ளதால் மலைக்கிராம மக்கள் அச்சமடைந்துள்ளனர்.தேனி மாவட்டம், சின்னமனூர் அருகே ஹைவேவிஸ் பேரூராட்சியில் உள்ள 7 மலைக்கிராமங்களில் சுமார் 8,500 பேர் வசிக்கின்றனர். இக்கிராமங்களை சுற்றி உள்ள அடர்ந்த வனப்பகுதியில் புலி, சிறுத்தை, யானை, உள்ளிட்ட பல்வேறு வனவிலங்குகள் வசிக்கின்றன. தற்போது கார்த்திகை மாதத்தையொட்டி, கேரள வனப்பகுதியிலிருந்து யானைகள், ஹைவேவிஸ்,  மேகமலை மலைக்கிராம பகுதிகளுக்கு இடம் பெயர்ந்துள்ளன.

ஹைவேவிஸ் மலைக்கிராமத்தில் தபால் அலுவலம் அருகே நேற்று முன்தினம் 4 யானைகள் குட்டிகளுடன் உலாவியது. இதை அப்பகுதி மக்கள் தங்கள் செல்போனில் படம் பிடித்துள்ளனர். மேலும், அப்பகுதியைச் சேர்ந்த தேயிலைத் தோட்டத் தொழிலாளர்கள் வேலைக்கு செல்ல முடியாமல் வீட்டிற்குள்ளே முடங்கி உள்ளனர். ஒவ்வொரு ஆண்டும் சபரிமலை ஐயப்பன் கோயில் சீசனில், யானைக்கூட்டம் வழிமாறி, ஹைவேவிஸ் மலைக்கிராம குடியிருப்பு பகுதிக்குள் நுழைவது வழக்கம். எனவே, சின்னமனூர் வனத்துறையினர் ஹைவேவிஸ் மலைக்கிராமங்களில் முகாமிட்டுள்ள காட்டுயானைகளை வனப்பகுதிக்குள் விரட்டுவதற்கான நடவடிக்கைகளை உடனடியாக எடுக்க வேண்டும் என மலைக்கிராம மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Related Stories: