விபத்தில் சிக்கியவர்களை ஏற்றிக் கொண்டு சென்ற ஆம்புலன்ஸ்-பஸ் மோதல் 2 பேர் பலி; 3 பேர் காயம்: வேடசந்தூர் அருகே பரிதாபம்

வேடசந்தூர்:வேடசந்தூர் அருகே தனியார் பஸ் மீது விபத்தில் சிக்கியவர்களை ஏற்றிச் சென்ற ஆம்புலன்ஸ் மோதிய விபத்தில் 2 பேர் பலியாயினர். 3 பேர் காயமடைந்தார்.திண்டுக்கல் மாவட்டம், வேடசந்தூரில் இருந்து திண்டுக்கல் நோக்கி நேற்று தனியார் பஸ் பயணிகளை ஏற்றிக் கொண்டு சென்றது. பஸ்சை ரமேஷ் (29) ஓட்டி வந்தார். பின்னால் வேடசந்தூர் ஜிஹெச்சில் இருந்து திண்டுக்கல் ஜிஹெச்சிற்கு மேல்சிகிச்சைக்காக இருவரை ஏற்றிக் கொண்டு 108 ஆம்புலன்ஸ் வந்தது. வேடசந்தூர் - திண்டுக்கல் நான்கு வழிச்சாலையில் விட்டல்நாயக்கன்பட்டி அருகே தனியார் மில் ஸ்டாப்பில் பயணிகளை இறக்கி விட பஸ் திடீரென நின்றது. இதனால் ஆம்புலன்ஸ் ஒதுங்க வழியின்றி பஸ்சின் பின்னால் மோதியது. இதில் ஆம்புலன்சில் இருந்த நோயாளிகள் பழனிச்சாமி (45), வீரக்குமார் (40) சம்பவ இடத்திலே உயிரிழந்தனர்.

மற்றொரு நோயாளியான நடராஜன் (57) படுகாயமடைந்து மேல்சிகிச்சைக்காக மதுரை ஜிஹெச்சிற்கு அனுப்பி வைக்கப்பட்டார். ஆம்புலன்சில் வந்த உதவியாளர் சத்யா, பணி முடிந்து வீட்டிற்கு சென்ற செவிலியர் சுமதி சிறு காயங்களுடன் திண்டுக்கல் ஜிஹெச்சில் அனுமதிக்கப்பட்டனர். ஆம்புலன்ஸ்  டிரைவர் சங்கர் எவ்வித காயமின்றி தப்பினார். விபத்து குறித்து வேடசந்தூர் போலீசார் வழக்கு பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.விபத்தில் பலியான பழனிச்சாமி, வீரக்குமார்  நேற்று வேடசந்தூர் அருகே கோவிலூரில் 2 டூவீலர்கள் மோதியதில் காயமடைந்ததால் வேடசந்தூர் ஜிஹெச்சில் சிகிச்சையில் சேர்ந்துள்ளனர். இவர்களை மேல்சிகிச்சைக்காக திண்டுக்கல் அழைத்து செல்லும்போது இவ்விபத்து நடந்துள்ளது. அதேபோல் வேடசந்தூர் பகுதியில் நடந்த மற்றொரு டூவீலர் விபத்தில் காயமடைந்த நடராஜனும் இவ்விபத்தில் சிக்கி படுகாயமடைந்தார்.

Related Stories: