தொடர் மழையால் பிக்கட்டி, எடக்காடு சாலைகளில் மரங்கள் வேரோடு சாய்ந்தன: போக்குவரத்து பாதிப்பு

மஞ்சூர்: மஞ்சூர் சுற்றுபுற பகுதிகளில் பெய்து வரும் பலத்த மழையால் பிக்கட்டி, எடக்காடு சாலைகளில் மரங்கள் வேரோடு சாய்ந்து விழுந்ததால் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.நீலகிரி மாவட்டம் மஞ்சூர் சுற்றுபுற பகுதிகளில் கடந்த சில நாட்களாக தொடர்ந்து பலத்த மழை பெய்து வருகிறது. மழையால் பல்வேறு இடங்களிலும் மரங்கள் விழுவதும், மண் சரிவுகள் ஏற்படுவதுமாக உள்ளது. சேரனுார், மஞ்சூர் பகுதிகளில் இரண்டு வீடுகளும் இடிந்து விழுந்தன.தொடர்ந்து நேற்று முன்தினம் காலை துவங்கி இரவு முழுவதும் விடிய, விடிய பலத்த மழை பெய்தது. இதில், மஞ்சூர் பிக்கட்டி சாலையில் கட்லாடா பாலம் அருகே சாலையோரம் இருந்த ராட்சத மரம் ஒன்று வேரோடு சாய்ந்து ரோட்டில் விழுந்தது. இதனால், மஞ்சூரில் இருந்து பிக்கட்டி வழியாக ஊட்டி செல்லும் பிரதான சாலையில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. இதேபோல், நேற்று காலை எடக்காடு சாலையில் முக்கிமலை அருகே ராட்சத மரம் சாலையின் குறுக்கே வேரோடு சாய்ந்து விழுந்ததால் மஞ்சூர் எடக்காடு சாலையில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. வாகன நகர முடியாமல் நீண்ட வரிசையில் அணி வகுத்து நின்றன.

இது குறித்து தகவல் அறிந்த நெடுஞ்சாலைதுறை குந்தா கோட்ட உதவி பொறியார் பெருமாள் மேற்பார்வையில் சாலை ஆய்வாளர்கள் ரவிக்குமார், நஞ்சுண்டன் மற்றும் சாலைப்பணியார்கள் விரைந்து சென்று சாலைகளில் விழுந்த மரங்களை வெட்டி அகற்றும் பணியில் ஈடுபட்டனர். தொடர்ந்து மஞ்சூர் பகுதியில் இருந்து ஜேசிபி வாகனம் வரவழைக்கப்பட்டு வெட்டப்பட்ட மரங்கள் மற்றும் மண் சரிவுகள் அகற்றப்பட்டன. அதன்பின், இச்சாலைகளில் மீண்டும் போக்குவரத்து துவங்கியது. நேற்று காலை நிலவரப்படி மாவட்டத்தில் அதிகபட்சமாக மஞ்சூர் அருகே உள்ள கிண்ணக்கொரை பகுதியில் 5.2 செ.மீ மழையும், குந்தாவில் 4 செ.மீ மழையும் பதிவானது. பிற பகுதிகளில் பெய்த மழை விவரம் (மில்லி மீட்டரில்) வருமாறு: கேத்தி-36, பாலகொலா-35, உலிக்கல்-33, அவலாஞ்சி-29, குன்னுார்-29, எமரால்டு-26, பர்லியார்-26, கோத்தகிரி-22.5, எடப்பள்ளி-19, ஊட்டி-17.5, அப்பர்பவானி-11 மி.மீ உள்பட மாவட்டம் முழுவதும் நேற்று 475 மில்லி மீட்டர் மழை பதிவாகியுள்ளது.

Related Stories: