நூல் விலை ரூ.10 மட்டும் குறைப்பு: தொழில்துறையினர் ஏமாற்றம்

திருப்பூர்: கடந்த மாதம், கிலோவுக்கு 50 ரூபாய் நூல் விலை உயர்ந்த நிலையில், நேற்று அனைத்து ரகங்களுக்கும் ரூ.10 வரை மட்டுமே குறைக்கப்பட்டதால் தொழில்துறையினர் ஏமாற்றம் அடைந்துள்ளனர்.பருத்தி பஞ்சு விலை கடுமையாக உயர்ந்ததால், தமிழகத்தில் உள்ள நூற்பாலைகள், நூலிழை விலையை உயர்த்தி வருகின்றன. ஒவ்வொரு மாதமும், பருத்தி பஞ்சு விலையை அடிப்படையாக கொண்டு, நூல் விலை நிர்ணயிக்கப்படுகிறது. இதுவரை இல்லாத அளவுக்கு, கடந்த மாதம் நூல் விலை கிலோவுக்கு 50 ரூபாய் உயர்ந்ததால், ஒட்டுமொத்த ஜவுளித்துறையும் அதிர்ச்சி அடைந்தது. திருப்பூர் பின்னலாடை தொழில்துறையினர் இணைந்து, கடையடைப்பு மற்றும் உண்ணாவிரத போராட்டம் நடத்தினர்.

இந்நிலையில், நேற்று காலை 10 மணிக்கு நூற்பாலைகள் நூல் விலை குறித்த அறிவிப்பை வெளியிட்டன. இதில் அனைத்து ரகங்களுக்கும் ரூ.10 மட்டுமே குறைக்கப்பட்டுள்ளது. இது தொழில்துறையினரிடையே ஏமாற்றத்தை ஏற்படுத்தி உள்ளது. புதிய நூல் விலை  கிலோ விவரம்: 20-ம் நம்பர் கோம்டு ரக நுால் (வரி நீங்கலாக) ரூ.295, 24-ம் நம்பர் ரூ.305, 30-ம் நம்பர் நுால் ரூ.315, 34-ம் நம்பர் ரூ.335, 40-ம் நம்பர் ரூ.355, 20-ம் நம்பர் செமிகோம்டு ரக நுால் ரூ.285, 24-ம் நம்பர் ரூ.295, 30-ம் நம்பர் ரூ.305, 34-ம் நம்பர் ரூ.325, 40-ம் நம்பர் ரூ.345 ஆகும். இது குறித்து திருப்பூர் ஏற்றுமதியாளர்கள் சங்கத் தலைவர் ராஜா எம்.சண்முகம் கூறியதாவது: நூல் விலை ரூ.10 குறைப்பு என்பது ஏற்றுக்கொள்ள முடியாத ஒன்று. குறைந்தபட்சம் கடந்த மாதம் ஏற்றிய ரூ. 50-ஐ விலையை குறைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். நூல் விலை மட்டுமின்றி ஜாப் ஒர்க் நிறுவனங்கள் மற்றும் சாய ஆலைகள் உட்பட 40 சதவீதம் வரை, விலை உயர்த்தியிருப்பதால் தொழில்துறையினர் கடும் சிரமத்தை சந்திக்கின்றனர். ஆகவே இவற்றை குறைக்கவும் மத்திய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றார்.

Related Stories: