மேலூர் அருகே மயானத்திற்கு பாதை இல்லை கழுத்தளவு தண்ணீரில் பிணத்தை கயிறு கட்டி சுமந்து சென்ற மக்கள்

மேலூர்: மேலூர் அருகே மயானத்திற்கு பாதையில்லாததால், கழுத்தளவு தண்ணீரில் கயிறு கட்டி, இறந்தவர் உடலை ஆபத்தான முறையில் தூக்கி சென்று கிராம மக்கள் அடக்கம் செய்தனர்.மதுரை மாவட்டம், மேலூர் கொட்டாம்பட்டி ஒன்றியம் வஞ்சிநகரம் ஊராட்சியில் உள்ளது கண்டுகப்பட்டி கிராமம். இங்கு நூற்றுக்கும் மேற்பட்ட குடியிருப்புகள் உள்ளன. இப்பகுதி மக்களுக்கு மயானம் செல்வதற்கு உரிய பாதைவசதி இல்லை. இவர்களுக்கான மயானம் அருகில் உள்ள கொடுக்கம்பட்டி எல்கையில் உள்ளது. இங்கு செல்ல, வழியில் உள்ள கண்மாய், விளைநிலங்களை கடந்து செல்ல வேண்டும். தற்போது பெய்து வரும் தொடர்மழை காரணமாக கண்மாய் நிறைந்து மறுகால் பாய்ந்து வருகிறது. இங்கு நேற்று முன்தினம் கண்டுகப்பட்டியை சேர்ந்த செல்வம்(60) என்ற முதியவர் இறந்து போனார். இவரின் உடலை அடக்கம் செய்வதற்காக கிராமமக்கள், தண்ணீர் நிறைந்த கண்மாயில் கழுத்தளவிற்கு மூழ்கியபடி சுமந்து சென்றனர். தண்ணீரின் ஓட்டம் அதிகமாக இருக்கவே, சுமந்து செல்வதில் தடை ஏற்பட்டு, காலதாமதம் ஏற்பட்டது.

இதனால் கண்மாயின் மறுகரை வரை கயிறு கட்டி, அதனை பிடித்தபடி இளைஞர்கள் ஆபத்தான முறையில் இறந்தவரின் உடலை சுமந்தபடி சென்றனர். மழைக்காலங்களில் இப்படி தாங்கள் அவதிப்பட்டு வருவதாக தெரிவித்த கிராம மக்கள், மயானத்திற்கு உரியபாதை அமைத்து, கண்மாயை கடக்க, பாலமும் அமைத்து தர வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர். ஒருவரின் இறப்பே சோகமான விஷயம். இதில் அவரை அடக்கம் செய்வதற்கு செல்லும் வழியை நினைத்து கிராம மக்கள் அதிக சோகமடைந்து வருகிறது தொடர்கதையாக உள்ளது. எனவே, மாவட்ட  அதிகாரிகள் விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என கண்டுகப்பட்டி கிராமமக்கள் வலியுறுத்தியுள்ளனர்.

Related Stories: