சேலம்: சேலம்-விருத்தாச்சலம் எக்ஸ்பிரஸ் ரயிலில் நேற்று முதல் கூடுதலாக 4 பெட்டிகள் இணைத்து இயக்கப்படுகிறது. இதனால் பயணிகள் மகிழ்ச்சி அடைந்தனர்.கொரோனா ஊரடங்கு காலத்திற்கு முன்பு சேலத்தில் இருந்து விருத்தாச்சலத்திற்கு தினமும் இருமார்க்கத்தில் 4 பாசஞ்சர் ரயில்கள் இயக்கப்பட்டு வந்தது. கொரோனா ஊரடங்கால், அந்த ரயில் சேவை நிறுத்தி வைக்கப்பட்ட நிலையில், மீண்டும் கடந்த 3 மாதத்திற்கு முன்பு சேலம்-விருத்தாச்சலம் பாசஞ்சர் ரயிலை முன்பதிவில்லா எக்ஸ்பிரஸ் ரயிலாக மாற்றி இயக்கத்திற்கு கொண்டு வந்தனர். ஆனால், இருமார்க்கத்திலும் 4 ரயில் என்ற நிலையை மாற்றி, 2 ரயில் மட்டுமே இயக்கி வருகின்றனர்.
விருத்தாச்சலம்-சேலம் ரயில், காலையில் சேலம் வந்து சேரும். பிறகு மறுமார்க்கத்தில் மாலையில் சேலம்-விருத்தாச்சலம் ரயில் இயக்கப்பட்டு வருகிறது. இந்த ரயிலில் 8 பெட்டிகள் மட்டுமே இணைத்து இயக்கி வருகின்றனர். இதனால், கூடுதல் பெட்டிகளை இணைத்து இயக்க வேண்டும் என சேலம், வாழப்பாடி, ஆத்தூர், சின்னசேலம் பகுதி பயணிகள் தொடர்ந்து கோரிக்கை விடுத்து வந்தனர். காலை நேரத்தில் விருத்தாச்சலம், சின்னசேலம், ஆத்தூர் பகுதியில் இருந்து ஆயிரக்கணக்கானோர் சேலத்திற்கு வர இந்த ரயில் சேவையை பயன்படுத்தி வருவதால், பெட்டி எண்ணிக்கையை உடனடியாக அதிகரிக்க வேண்டும் என தெற்கு ரயில்வே நிர்வாகத்திற்கு பயணிகள் கோரிக்கை மனுக்களை அனுப்பினர். இக்கோரிக்கையை தெற்கு ரயில்வே நிர்வாகம் ஏற்று, சேலம்-விருத்தாச்சலம் முன்பதிவில்லா ரயிலில் கூடுதலாக 4 பெட்டிகள் இணைக்கப்படும் என அறிவித்தது. இதையடுத்து, நேற்று முதல் சேலம்-விருத்தாச்சலம் ரயில், கூடுதலாக 4 பெட்டிகள் இணைக்கப்பட்டு 12 பெட்டிகளுடன் இயக்கப்பட்டது. கூடுதலாக பெட்டிகள் இணைக்கப்பட்டதால் பயணிகள், கல்லூரி மாணவர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.