மதுரை, விருதுநகர், நெல்லை மாவட்டங்களில் டிச.4-ம் தேதி கனமழை :வானிலை ஆய்வு மையம் வார்னிங்!!

சென்னை : மதுரை, விருதுநகர், நெல்லை மாவட்டங்களில் டிச.4-ம் தேதி கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது.

சென்னை வானிலை ஆய்வு மையம் இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில்,  

வெப்பச்சலனம் காரணமாக டிசம்பர் 2ஆம் தேதி தென் மாவட்டங்கள், மேற்கு தொடர்ச்சி மலையை ஒட்டிய மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் லேசானது முதல் மிதமான மழையும், ஏனைய மாவட்டங்கள் ஓரிரு இடங்களில் லேசான மழையும் பெய்யக்கூடும்.டிசம்பர் 3ஆம் தேதி மேற்கு தொடர்ச்சி மலையை ஒட்டிய மாவட்டங்கள் மற்றும் அதனை ஒட்டிய உள் மாவட்டங்கள், தென் மாவட்டங்களில் ஒரு சில இடங்களில் இடி மின்னலுடன் கூடிய மிதமான மழையும், ஏனைய மாவட்டங்கள் மற்றும் புதுவை, காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் லேசான மழை பெய்யக்கூடும்

மத்திய வங்கக் கடல் மற்றும் அதனை ஒட்டிய தென் மேற்கு வங்க கடல் பகுதியில் நிலவ உள்ள காற்றழுத்த தாழ்வு மண்டலம் காரணமாக டிசம்பர் 4ஆம் தேதி மதுரை, விருதுநகர், திருநெல்வேலி மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடி மின்னலுடன் கூடிய கன மழையும், மேற்கு தொடர்ச்சி மலையை ஒட்டிய மாவட்டங்கள் மற்றும் உள் மாவட்டங்களில் அனேக இடங்களில் இடி மின்னலுடன் கூடிய மிதமான மழையும், வட கடலோர மாவட்டங்கள் மற்றும் புதுவை, காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் லேசான மழையும் பெய்யக்கூடும்.

டிசம்பர் 5ஆம் தேதி நீலகிரி, கோயம்புத்தூர், சேலம், தர்மபுரி, ஈரோடு, தேனி, மதுரை, சிவகங்கை, விருதுநகர் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடி மின்னலுடன் கூடிய கன மழையும், ஏனைய மேற்கு தொடர்ச்சி மலையை ஒட்டிய மாவட்டங்கள் மற்றும் உள் மாவட்டங்களில் அநேக இடங்களில் இடி மின்னலுடன் கூடிய மிதமான மழையும், வட கடலோர மாவட்டங்கள் மற்றும் புதுவை, காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் லேசான மழையும் பெய்யக்கூடும்

டிசம்பர் 6ஆம் தேதி நீலகிரி, கோயம்புத்தூர், நாமக்கல், திருப்பூர், தேனி, திண்டுக்கல் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடி மின்னலுடன் கூடிய கன மழையும், ஏனைய மேற்கு தொடர்ச்சி மலையை ஒட்டிய மாவட்டங்கள் மற்றும் அதனை ஒட்டிய உள் மாவட்டங்களில் அநேக இடங்களில் இடியுடன் கூடிய மிதமான மழையும், ஏனைய மாவட்டங்கள் மற்றும் புதுவை காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் லேசான மழை பெய்யக்கூடும்

சென்னையை பொறுத்தவரை அடுத்த 48 மணி நேரத்திற்கு. வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். அதிகபட்ச வெப்பநிலை 32 மற்றும் குறைந்தபட்ச வெப்பநிலை 25 டிகிரி செல்சியஸை ஒட்டி இருக்கும்.

தென்கிழக்கு வங்க கடல் பகுதியில் நிலவும் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதி மேற்கு வடமேற்கு திசையில் நகர்ந்து அடுத்த 12 மணி நேரத்தில் காற்றழுத்த தாழ்வு மண்டலமாகவும், அதனைத் தொடர்ந்து 24 மணி நேரத்தில் புயலாக வலுப்பெற்று மத்திய வங்கக் கடல் பகுதிக்கு நகரக் கூடும். இது மேலும் வடமேற்கு திசையில் நகர்ந்து வடக்கு ஆந்திரா தெற்கு ஒரிசா கரையை வரும் 4 ம் தேதி காலை நெருங்க கூடும்.

இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related Stories: