ஐயப்ப பக்தர்களுக்கு ஹேப்பி நியூஸ்: சபரிமலையில் 5 வயதுக்கு உட்பட்டோருக்கு முன்பதிவு தேவை இல்லை..தேவஸ்தானம் அறிவிப்பு..!!

திருவனந்தபுரம்: சபரிமலையில் சுவாமி தரிசனத்திற்கு வரும் 5 வயதிற்கு உட்பட்ட குழந்தைகளுக்கு ஆன்லைன் முன்பதிவு தேவையில்லை என திருவிதாங்கூர் தேவஸ்தானம் அறிவித்துள்ளது. கேரளாவில் பலத்த மழை காரணமாக சபரிமலைக்கு வரும் பக்தர்களின் வருகை குறைந்த நிலையில், தற்போது பக்தர்களின் வருகை அதிகரித்துள்ளது. பக்தர்கள் நீண்ட வரிசையில் காத்திருந்து தரிசனம் செய்து வருகின்றனர். மேலும் ஐயப்ப பக்தர்களின் வசதிக்காக பல கட்டங்களாக தளர்வுகளும் அமல்படுத்தப்பட்டு வருகின்றன. ஏற்கனவே 10 வயதிற்கு உட்பட்ட குழந்தைகளுக்கு ஆர்.டி.பி.சி.ஆர். நெகட்டிவ் சான்றிதழ் கட்டாயம் இல்லை என அறிவிக்கப்பட்டிருந்தது.

இந்நிலையில், தற்போது 5 வயதிற்கு உட்பட்ட குழந்தைகளுக்கு ஆன்லைன் முன்பதிவு தேவையில்லை என முடிவு எடுக்கப்பட்டுள்ளது. 10 முதல் 18 வயதிற்கு உட்பட்ட ஐயப்ப பக்தர்களுக்கு ஆர்.டி.பி.சி.ஆர். நெகட்டிவ் சான்றிதழ் கட்டாயமாக்கப்பட்டுள்ளது. மற்றவர்களுக்கு ஆர்.டி.பி.சி.ஆர். நெகட்டிவ் சான்றிதழ் அல்லது இரண்டு டோஸ் கொரோனா தடுப்பூசி போட்டதற்கான சான்றிதழ் நகல் தரிசனத்திற்கு வரும் போது கொண்டுவர வேண்டும் என்றும் திருவிதாங்கூர் தேவஸ்தானம் அறிவித்துள்ளது.

18 வயதிற்கு உட்பட்டவர்களுக்கு பள்ளி, கல்லூரி அடையாள அட்டை நகலை வைத்து தரிசனத்திற்கான ஆன்லைன் முன்பதிவு செய்துகொள்ளலாம் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. தேவஸ்தானத்தின் இந்த அறிவிப்பு சபரிமலை செல்லும் பக்தர்களுக்கு மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ஐயப்ப பக்தர்களுக்கு தேவையான அப்பம், அரவணை உள்ளிட்ட பிரசாதம் போதிய அளவில் இருப்பு உள்ளதாகவும், ஐயப்ப பக்தர்களுக்காக பாதுகாப்பு, போக்குவரத்து, குடிநீர் உள்ளிட்ட அனைத்து அடிப்படை வசதிகளும் செய்யப்பட்டுள்ளதாகவும் தேவஸ்வம் தேவசம் போர்டு தெரிவித்துள்ளது.

Related Stories: