தை முதல் நாளே தமிழ் புத்தாண்டு என்பதை அதிமுக ஏற்க மறுத்தால் தற்போது இருக்கும் இடம் கூட இல்லாமல் போகும்: கி.வீரமணி விமர்சனம்

சென்னை: தை முதல் நாளே தமிழ் புத்தாண்டு என்பதை இன்னமும் அதிமுக ஏற்க மறுத்தால் தற்போது இருக்கும் இடம் கூட இல்லாமல் போகும் என திராவிடர் கழக தலைவர் கி.வீரமணி விமர்சித்துள்ளார். திராவிடர் கழக தலைவர் கி.வீரமணியின் 89வது பிறந்தநாளை ஒட்டி முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் சென்னை அடையாறில் உள்ள அவரது இல்லத்திற்கு சென்று வாழ்த்து தெரிவித்தார். அமைச்சர்கள் துரைமுருகன், எ.வ.வேலு, நேரு, எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் மற்றும் கவிஞர் வைரமுத்து உள்ளிட்டோரும் நேரில் சென்று வாழ்த்து தெரிவித்தனர். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய கி.வீரமணி, சித்திரை முதல் நாளே தமிழ் புத்தாண்டாக தொடர வேண்டும் என ஓ.பன்னீர்செல்வம் கூறி இருப்பது அண்ணாவுக்கு செய்யும் துரோகம் என்றார்.

அண்ணாவின் பெயரை வைத்துக்கொண்டு இனியும் அண்ணாவுக்கு கலங்கம் கற்பிக்க வேண்டாம் என்ற அவர், தை ஒன்றாம் தேதி தமிழ் புத்தாண்டு என கலைஞர் அறிவித்ததை ஜெயலலிதா வீம்புக்கு மாற்றினார் என்றார். ஜெயலலிதா செய்த அதே தவறை இப்போதும் அதிமுகவினர் செய்தால் தற்போது இருக்கும் இடம் கூட இல்லாமல் போகும் என்றார். பிறந்தநாளை ஒட்டி 5 செயல் திட்டங்களை அறிவித்த கி.வீரமணி, சாதி ஒழிப்பு பணிக்காகவே தனது எஞ்சிய வாழ்நாளை கழிக்கப்போவதாக கூறினார். திமுக அரசுக்கு அரணாக இருப்பதுடன் ஆணவ கொலைகளை தடுக்கவும், நீட் தேர்வை ஒழிக்கவும் சட்டரீதியான தீர்வுகளை நோக்கி செயல்பட போவதாக தெரிவித்தார்.

Related Stories: