12 எம்.பி.க்கள் சஸ்பெண்ட் செய்யப்பட்டதற்கு எதிர்ப்பு!: நாடாளுமன்ற வளாகத்தில் 3வது நாளாக எதிர்க்கட்சிகள் போராட்டம்..!!

டெல்லி: 12 எதிர்க்கட்சி எம்.பி.க்கள் சஸ்பெண்ட் செய்யப்பட்டதை ரத்து செய்யக்கோரி நாடாளுமன்ற வளாகத்தில் 3வது நாளாக காங்கிரஸ், திமுக, உள்ளிட்ட கட்சிகளின் எம்.பி.க்கள் போராட்டம் நடத்தி வருகின்றனர். நாடாளுமன்ற மாநிலங்களவையில் 12 எம்.பி.க்கள் கடந்த திங்கட்கிழமையன்று சஸ்பெண்ட் செய்யப்படுவதாக மாநிலங்களவை தலைவர் வெங்கய்ய நாயுடு அறிவித்தார். கடந்த ஆகஸ்ட் மாதம் நடைபெற்ற மழைக்கால கூட்டத்தொடரின் போது அவை நடவடிக்கைகளில் இடையூறு செய்ததாகவும், அவை மரபுகளை மீறிவிட்டதாகவும் கூறி காங்கிரஸ் கட்சியை சேர்ந்த 6 எம்.பி.க்கள், சிவசேனா கட்சி 2 பேர், இடதுசாரி கட்சி எம்.பி.க்கள் 2 பேர், திரிணாமுல் காங்கிரஸ் கட்சியை சேர்ந்த 2 எம்.பி.க்கள் என மொத்தம் 12 எம்.பி.க்கள் குளிர்கால கூட்டத்தொடர் முழுவதும் சஸ்பெண்ட் செய்யப்படுவதாக அறிவிக்கப்பட்டது.

இதற்கு எதிர்ப்பு தெரிவித்து நாடாளுமன்ற வளாகத்தில் உள்ள மகாத்மா காந்தி சிலை முன்பு காங்கிரஸ், திமுக உள்ளிட்ட கட்சிகளை சேர்ந்த எம்.பி.க்கள் கைகளில் கருப்புப்பட்டை அணிந்து ஒன்றிய அரசுக்கு எதிராக ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இந்த ஆர்ப்பாட்டம் என்பது தற்போது 3வது நாளை எட்டியுள்ளது. அப்போது மாநிலங்களவை உறுப்பினர்கள் 12 பேரின் சஸ்பெண்டை கண்டித்தும், உத்தரவை ரத்து செய்யக்கோரியும் அவர்கள் முழக்கங்களை எழுப்பினர். நாட்டையும், ஜனநாயகத்தையும் பாதுகாக்க வேண்டும் என்று அவர்கள் முழக்கமிட்டனர். சஸ்பெண்ட் செய்யப்பட்ட 12 உறுப்பினர்களும் நாடாளுமன்ற வளாகத்தில் உள்ள மகாத்மா காந்தி சிலை முன்பு 3வது நாளாக தர்ணாவில் ஈடுபட்டு வருகின்றனர்.

Related Stories: