நீர்நிலைகளை ஆக்கிரமித்தால் குடும்ப அட்டையை பறிமுதல் செய்க: தமிழ்நாடு முஸ்லிம் லீக்

சென்னை : நீர்நிலை ஆக்கிரமித்துள்ளவர்களின் குடும்ப அட்டை பறிப்பதுடன், மின் இணைப்பு மற்றும் குடிநீர் இணைப்பு துண்டிக்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என தமிழ்நாடு முஸ்லிம் லீக் கோரிக்கை விடுத்துள்ளது.

இது குறித்து அக்கட்சி நிறுவனத் தலைவர் முஸ்தபா வெளியிட்டுள்ள அறிக்கையில்:

தமிழகத்தில் பரவலாக கடந்த சில நாட்களாகவே வடகிழக்கு பருவ மழை பெய்து வருவதால் ஏரிகள் மற்றும் நீர்நிலைகளில் தண்ணீர் வந்து கொண்டு இருக்கிறது. மாநிலம் முழுவதும் உள்ள 38 மாவட்டங்களில் 14 ஆயிரத்து 139 பாசன ஏரிகள் உள்ளன. இதில் 4 ஆயிரத்து 266 ஏரிகள் நூறு சதவீதம் நிரம்பி உள்ளன.

அதேபோல் 698 ஏரிகள் 91 முதல் 99 சதவீதம் வரை நிரம்பி வருகின்றன. 843 ஏரிகள் 81 முதல் 90 சதவீதம் தண்ணீர் இருப்பு உள்ளது. 1,346 ஏரிகள் 71 முதல் 80 சதவீதம் நீர் வந்து உள்ளது. 1,555 ஏரிகள் 51 முதல் 70 சதவீதம் நீர் நிரம்பி வருகிறது. 2 ஆயிரத்து 237 பாசன ஏரிகளில் 26 முதல் 50 சதவீதம் நீர் இருப்பு உள்ளது. 2 ஆயிரத்து 756 ஏரிகளில் ஒன்று முதல் 25 சதவீதமும், 438 ஏரிகளில் தண்ணீரே இல்லாத நிலையும் உள்ளது.

சென்னையை பொறுத்தவரையில் பூண்டி, சோழவரம், புழல் மற்றும் செம்பரம்பாக்கம் ஏரிகளுக்கு போதுமான அளவு தண்ணீர் வந்து கொண்டு இருக்கிறது. அதேபோல் மாநிலம் முழுவதும் 90 பெரிய மற்றும் சிறிய அளவிலான அணைகள் உள்ளன. இவற்றின் மொத்த கொள்ளளவு 2 லட்சத்து 24 ஆயிரத்து 297 மில்லியன் கன (224.297 டி.எம்.சி.) அடியாகும். தற்போது பெய்து வரும் வடகிழக்கு பருவமழையால் அணைகளில் ஒரு லட்சத்து 64 ஆயிரத்து 636 மில்லியன் கன அடி (164.636 டி.எம்.சி.) நீர் சேமிக்கப்பட்டு உள்ளது.

இருப்பு சதவீதத்தை பார்க்கும் போது 73.40% மாகும். இதனால் வருகிற கோடைக்காலத்தில் மாநிலம் முழுவதும் தண்ணீர் தட்டுப்பாடு ஏற்பட வாய்ப்பு இல்லை. அதேபோல் நிலத்தடி நீரும் எதிர்பார்த்த அளவு உயர்ந்து உள்ளது.

இப்படி வடகிழக்கு பருவமழை நமக்கு ஒரு புறம் மகிழ்ச்சி ஏற்படுத்தியிருந்தாலும், மற்றொரு புறம் மிகுந்த கவலையும் ஏற்படுத்தியுள்ளது என்பது தான் உண்மை. சென்னை உள்ளிட்ட புறநகர் பகுதிகள் மழை வெள்ளத்தால் சாலைகள், தெருக்களை ஆக்கிரமித்தோடு, மக்கள் வாழும் பகுதிகளும், வீடுகளிலும் புகுந்து வெகுவாக பாதிக்கப்பட்டுள்ளனர்.

தமிழகத்தில் பல இடங்களில் நீர் செல்லும் வழிதடங்களை ஆக்ரமிப்பு செய்யப்பட்டதன் காரணமாகவே, மக்கள் இந்தளவுக்கு பாதிக்கப்பட்டுள்ளனர். மக்களின் மழை வெள்ளத்தில் நிரந்தர தீர்வு காண நீர்நிலை ஆக்கிரத்துள்ளவர்களுக்கு மின், குடிநீர் இணைப்பை துண்டிக்க வேண்டுமென தமிழக அரசை தமிழ்நாடு முஸ்லிம் லீக் சார்பில் கேட்டுக் கொள்கிறேன்.

அதோடு ஆக்கிரத்துள்ளவர்களின் குடும்ப அட்டைகளையும் தமிழக அரசு திரும்ப பெற வேண்டும். அதுமட்டுமின்றி, நீர்நிலைகளை ஆக்கிரமிப்புக்களை வடகிழக்கு பருவமழை முடிந்தவுடன், போர்க்கால அடிப்படையில் தமிழக அரசு நடவடிக்கை மேற்கொள்வதோடு, அடையாள காணப்பட்டு அகற்றப்படும் நீர்நிலை ஆக்கிரமிப்புகளில் விளம்பர பலகை வைத்து, வருங்காலங்களில் ஆக்கிரமிப்பு செய்யாமல், அந்தந்த மாவட்ட ஆட்சியர்கள் தலைமையில் குழு அமைத்து தொடர் கண்காணிப்பு பணியை மேற்கொள்ள வேண்டுமென கேட்டுக் கொள்வதோடு, ஆக்கிரமிப்புகள் அகற்ற இடங்களை அரசு இணையத்தில் வெளியிட்டு, அந்த பகுதிகள் பாதுகாக்கப்பட்ட இடங்களாக தமிழக அரசு அறிவிக்க வேண்டுமெனவும் தமிழ்நாடு முஸ்லிம் லீக் சார்பில் வேண்டுகோள் விடுக்கிறேன்.

இவ்வாறு முஸ்தபா தெரிவித்துள்ளார்.

Related Stories: