குமரியில் வெளுத்து வாங்கும் கனமழை: ஒரேநாளில் 45 வீடுகள் இடிந்து சேதம்..செய்வதறியாது தவிக்கும் மக்கள்..!!

குமரி: கன்னியாகுமரியில் தொடர்ந்து பெய்து வரும் கனமழையால் ஒரேநாளில் மாவட்டம் முழுவதும் 45 வீடுகள் இடிந்து விழுந்து சேதமடைந்தன. மாற்று இடம் வழங்கப்படாததால் பாதிக்கப்பட்ட மக்கள் தவித்து வருகின்றனர். கன்னியாகுமரியில் கடந்த 2 மாதங்களாக கனமழை வெளுத்து வாங்கி வருகிறது. இதனால் மாவட்டத்தில் உள்ள முக்கிய அணைகள் வேகமாக நிரம்பி வருகின்றன. ஆறுகள், கால்வாய்களில் தண்ணீர் கரைபுரண்டு ஓடுகிறது. இதனால் பல்வேறு மலைக்கிராமங்கள் துண்டிக்கப்பட்டு மக்கள் வெளியேற முடியாமல் தவித்து வருகின்றனர். முக்கிய சாலைகளில் மழைநீர் செல்வதால் பல பகுதிகளில் அரசுப் பேருந்துகள் இயக்கப்படவில்லை.

மாவட்டம் முழுவதும் கால்வாய்கள் குளங்கள் உடைந்து தண்டவாளங்கள் தண்ணீர் புகுந்ததால் ரயில் போக்குவரத்து நிறுத்தப்பட்டதால் ரயில் பயணிகள் பெரும் சிரமம் அடைந்து உள்ளனர். இதனிடையே மழையால் ஏற்படும் விபத்துகளும் மாவட்டம் முழுவதும் அதிகரித்து வருகிறது. இந்நிலையில் கனமழையால் ஒரேநாளில் மாவட்டம் முழுவதும் 45 வீடுகள் இடிந்து விழுந்து சேதமடைந்தன. இதன் மூலம் கடந்த 20 நாட்களில் மாவட்டம் முழுவதும் மழையால் இடிந்த வீடுகளின் எண்ணிக்கை 1,295 ஆக உயர்ந்துள்ளது. வீடுகளை இழந்தவர்களுக்கு மாற்று இடம் வழங்கப்படாததால் பாதிக்கப்பட்ட மக்கள் செய்வதறியாது தவித்து வருகின்றனர். எனவே தங்களுக்கு மாற்று இடம் மீண்டும் வழங்க அவர்கள் அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளனர்.

Related Stories: