×

ஓமிக்ரான் கொரோனா தொற்று இதுவரை 23 நாடுகளுக்கு பரவல்... இந்த எண்ணிக்கை அதிகரிக்கும் : உலக சுகாதார அமைப்பு

ஜெனீவா : ஓமிக்ரான் கொரோனா தொற்று இதுவரை 23 நாடுகளுக்கு பரவி இருப்பதாக உலக சுகாதார அமைப்பு தெரிவித்துள்ளது. ஓமிக்ரான் என்ற புதிய வகை கொரோனா வைரஸ், உலக நாடுகளுக்கு பெரும் அச்சுறுத்தலாக உருவெடுத்து வருகிறது. முதன்முதலில் தென் ஆப்ரிக்காவில் கண்டறியப்பட்ட இந்த வைரஸ், ஐரோப்பிய நாடுகளில் அதிவேகமாக பரவி வருகிறது. ஆஸ்திரேலியா, ஜப்பான் ஆகிய நாடுகளிலும் ஓமிக்ரான்  வைரஸ், கால் பதித்துவிட்டது. இதனால் ஓமிக்ரான் வைரஸ் பரவலை தடுக்க உலக நாடுகள் முன்னெச்சரிக்கை பணிகளை தீவிரப்படுத்தியுள்ளன.

இந்த நிலையில், ஓமிக்ரான்  வைரஸ் உலகம் முழுவதும் 23 நாடுகளில் பரவி விட்டதாக உலக சுகாதார அமைப்பு தெரிவித்துள்ளது. பயண தடைகள் மூலம் ஓமிக்ரான் தொற்று பரவலை தடுக்க முடியாது என்றும் பயண தடைகளால் மக்களின் வாழ்வாதாரம் பெரும் சுமையாக மாறிவிடும் என்றும் உலக சுகாதார அமைப்பு கவலை தெரிவித்துள்ளது. இதனிடையே ஓமிக்ரான்  தொற்று ஆபத்து உள்ள தென் ஆப்ரிக்கா, ஐரோப்பிய நாடுகள், நியூசிலாந்து, சிங்கப்பூரில் இருந்து இந்தியா வரும் பயணிகளுக்கு நேற்று முதல் ஆர்டிபிசிஆர் பரிசோதனை கட்டாயமாக்கப்பட்டுள்ளது. அதன்படி, 11 விமானங்களில் வந்த 3,476 பேருக்கு நடத்தப்பட்ட பரிசோதனையில் 6 பயணிகளுக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. அவர்களுக்கு ஓமிக்ரான் வகை தொற்று பாதிப்பா என்பதை கண்டறிவதற்காக அவர்களின் சளி மாதிரிகள் ஆய்வகத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாக சுகாதாரத் துறை அமைச்சகம் கூறியுள்ளது.


Tags : World Health Organization , உலக சுகாதார அமைப்பு
× RELATED உலக சுகாதார நிறுவனம் தகவல்...