வங்கக்கடலில் தீவிர காற்றழுத்த தாழ்வு பகுதி.. 4ம் தேதி ஆந்திரா - ஒடிசா அருகே வரும் ஜாவத் புயல் : வானிலை ஆய்வு மையம் தகவல்

சென்னை : அந்தமானில் வங்கக்கடலில் உருவான காற்றழுத்த தாழ்வுப் பகுதி தீவிர காற்றழுத்த தாழ்வு பகுதியாக மாறியது என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. வானிலை ஆய்வு மையம் இன்று வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில், அந்தமானில் வங்கக்கடலில் உருவான காற்றழுத்த தாழ்வுப் பகுதி தீவிர காற்றழுத்த தாழ்வு பகுதியாக மாறியது. இந்த தீவிர காற்றழுத்த தாழ்வுப் பகுதி மேற்கு வட மேற்கு திசையில் நகர்ந்து, அடுத்த 12 மணி நேரத்தில் காற்றழுத்த தாழ்வு மண்டலமாக மாறும்.

 அதை தொடர்ந்து அடுத்த 24 மணி நேரத்தில் ஜாவத் புயலாக வலுப்பெற்று மத்திய வங்கக் கடல் பகுதிக்கு நகர்ந்து செல்லும்.பின்னர் வடமேற்கு திசையில் நகர்ந்து சற்று வலுப்பெற்று வடக்கு ஆந்திரா-தெற்கு ஒடிசா கரையை 4ம் தேதி காலை நெருங்கும். இதனால் தென் கிழக்கு மற்றும் அதை ஒட்டிய மத்திய கிழக்கு வங்கக் கடல், அந்தமான் கடல் பகுதிகளில் சூறாவளிக் காற்று மணிக்கு 60 கிமீ வேகத்தில் வீசும். இடையிடையே 70 கிமீ வேகத்தில் வீசும்.

3ம் தேதி மத்திய வங்கக் கடல் பகுதியில் புயல் காரணமாக மணிக்கு 75 கிமீ வேகத்திலும், இடையிடையே 85 கிமீ வேகத்திலும் சூறாவளிக் காற்று வீசும். 4ம் தேதி வடமேற்கு மற்றும் மத்திய மேற்கு வங்கக் கடல் பகுதிகளில் புயல் காற்று மணிக்கு 100 கிமீ முதல் 110 கிமீ வேகத்தில் வீசும். வடக்கு  ஆந்திரா, ஒடிசா கடலோரப் பகுதிகளிலும் காற்று வீசும். எனவே, மீனவர்கள் மேற்கண்ட பகுதிகளுக்கு இன்று முதல் 4ம் தேதி வரை செல்ல வேண்டாம், என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related Stories:

More