×

ராட்சத பாறை உருண்டு சாலைகள் பிளந்ததால் 2வது பாதை மூடல்: திருப்பதி மலைப்பாதை துண்டிப்பு

* பஸ்சில் 35 பக்தர்கள் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினர்
* 3வது மலைப்பாதை அமைக்க டெல்லி ஐஐடி குழு ஆய்வு

திருமலை: திருப்பதி மலைப்பாதையில் ராட்சத பாறை உருண்டு பயங்கர மண் சரிவு ஏற்பட்டது. மேலும் 3 வளைவுகளில் சாலை இரண்டாக பிளந்து போக்குவரத்துக்கு தடை விதிக்கப்பட்டது. இதில் பஸ்சில் பயணித்த 35 பக்தர்கள் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினர். தொடர்ந்து டெல்லி ஐஐடி குழு ஆய்வறிக்கை அடிப்படையில் 3வது மலைப்பாதை அமைப்பது குறித்து ஆலோசிக்கப்படும் என்று தேவஸ்தான அதிகாரிகள் தெரிவித்தனர். ஆந்திர மாநிலம், சித்தூர் மாவட்டத்தில் உள்ள திருப்பதி ஏழுமலையான் கோயிலுக்கு வாகனங்களில் சென்று வர 2 மலைப்பாதைகள் உள்ளது.

திருப்பதியில் இருந்து திருமலைக்கு செல்லும் 2வது பாதையும், திருமலையில் இருந்து திருப்பதிக்கு வர முதல் பாதையும் பயன்படுத்தப்படுகிறது. இதில், திருப்பதி செல்லும் மலைப்பாதையில் நேற்று காலை 7.30 மணியளவில் வழக்கம்போல் வாகனங்கள் சென்று கொண்டிருந்தன.  அப்போது ‘‘மொக்கால மெட்டு’’ என்ற இடத்தில் ஒரு ராட்சத பாறை திடீரென உருண்டு விழுந்தது. அவ்வழியாக 35 பக்தர்களுடன் அரசு பஸ் சென்றது. மலையில் இருந்து பாறை உருண்டு விழுவதை கண்ட டிரைவர், சுதாரித்துக் கொண்டு உடனடியாக பஸ்சை லாவகமாக நிறுத்தினார்.

இதனால், அதிர்ஷ்டவசமாக விபத்து தவிர்க்கப்பட்டது. பக்தர்களும் விபத்தில் இருந்து தப்பினர். இருப்பினும் பாறைகள் உருண்டு விழுந்ததில் 3 வளைவுகளில் உள்ள சாலை இரண்டாக பிளந்து சேதமடைந்தது. இதனால், திருப்பதி செல்லும் மலைப்பாதையில் 5 கிலோ மீட்டர் தூரத்திற்கு வாகனங்கள் ஆங்காங்கே நிறுத்தப்பட்டன. இதுகுறித்து தகவலறிந்த தேவஸ்தான அதிகாரிகள் உடனடியாக திருப்பதி செல்லும் 2வது மலைப்பாதையை மூடினர். அங்கு நீண்டநேரம் காத்திருந்த வாகனங்கள் மாற்று ஏற்பாடாக அருகில் இருந்த லிங்க் ரோடு (இணைப்பு சாலை) வழியாக திருப்பி விடப்பட்டன.

மேலும், திருப்பதியில் இருந்து திருமலைக்கு செல்ல வாகனங்களுக்கு தற்காலிகமாக தடை விதிக்கப்பட்டுள்ளது. அலிபிரியில் இருந்து திருமலைக்கு செல்ல வந்த வாகனங்கள் அனைத்தும் நிறுத்தப்பட்டது. இதனால், கபில தீர்த்தம் வரை 1 கிலோ மீட்டருக்கு மேல் வாகனங்கள் அணிவகுத்து நிற்கின்றன. இதையடுத்து, திருமலையில் இருந்து திருப்பதிக்கு வரும் முதலாவது மலைப்பாதை வழியாக திருமலைக்கு வாகனங்கள் அனுமதிக்கப்பட்டது. இந்நிலையில், நேற்று மதியம் மண் சரிவால் சேதமடைந்த சாலைகளை அறங்காவலர் குழு தலைவர் சுப்பா அதிகாரிகளுடன் ஆய்வு செய்தார்.

தேவஸ்தான அதிகாரிகள் கூறுகையில், ‘‘சென்னை ஐஐடி குழுவினர் திருப்பதி மலைப்பாதையை ஆய்வு செய்தனர். அப்போது, பாறைகளை வெடி வைத்து அகற்றுவதா? அல்லது பாறைகள் விழாத வகையில் தடுப்புச்சுவர் அமைப்பதா? என்பது குறித்து 2,3 நாட்களில் அறிக்கை சமர்பிக்கப்படும். எதிர்காலத்திலும் இதுபோன்ற சம்பவங்கள் நடைபெறாமல் இருக்க அனைத்து நடவடிக்கைகளும் எடுக்கப்படும். நிபுணர்கள் குழு வழங்கும் அறிக்கையை வைத்து தேவைப்படும் பட்சத்தில் முதல்வர் ஜெகன்மோகனிடம் ஆலோசித்து 3வது மலைப்பாதை அமைக்கப்படும்’’ என்றனர். கடந்த 18, 19ம் தேதிகளில் பெய்த கனமழையின்போது 2 மலைப்பாதையிலும் 13 இடங்களில் மண் சரிவு, பாறை சரிவு மற்றும் மரக்கிளை விழுந்த சம்பவங்கள் நடந்தன.


Tags : Tirupati mountain lane , 2nd lane closure due to giant rock-rolling roads split: Tirupati hill lane cut off
× RELATED டெல்லி நாடாளுமன்ற வளாகத்தில் தேசிய...