மீண்டும் தலை காட்டியது வெயில் நெல்லை, தூத்துக்குடி, தென்காசியில் மழை, வெள்ளம் தணிந்தது: தரைப்பாலங்களில் போக்குவரத்து தொடக்கம்

நெல்லை: குறைந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் திசை மாறியதால் நெல்லை, தூத்துக்குடி, தென்காசியில் ஒரு வாரத்திற்கு பிறகு மழை குறைந்தது. அணைகளுக்கு வரும் நீர்வரத்து குறைவானதால், தாமிரபரணி ஆற்றில் நேற்று வெள்ளம் சற்று தணிந்தது. இதையடுத்து நெல்லை சுற்றுவட்டார பகுதிகளில் தரைப்பாலங்களில் போக்குவரத்து மீண்டும் தொடங்கியது.

தென்கிழக்கு அரபிக்கடலில் நிலவிய வளிமண்டல சுழற்சி, வங்கக் கடலில் உருவான காற்றழுத்த தாழ்வு மண்டலம் ஆகியவை வலுவிழந்த காரணத்தால் தமிழகத்தில் நேற்று முன்தினம் முதல் மழை குறையத் தொடங்கியுள்ளது.

நெல்லை, தூத்துக்குடி, தென்காசி மாவட்டங்களில் கடந்த ஒரு வாரமாக விடாமல் துரத்திய மழை கடந்த இரு தினங்களாக குறைந்தது. நேற்று நெல்லை, தூத்துக்குடி மாவட்டங்களில் வழக்கமான வெயில் மீண்டும் தலைக்காட்டியது. அதிலும் 11 மணிக்கு சுள்ளென்று வெயில் அடித்தது. மலைப்பகுதிகளிலும் மழை இல்லாததால் அணைகளுக்கு நீர் வரத்து குறைந்தது.

தாமிரபரணி ஆற்றில் நேற்று முன்தினம் 40 ஆயிரம் கன அடி வரை தண்ணீர் வெள்ளமாக சென்ற நிலையில், நேற்று வெள்ளப்பெருக்கு மெல்ல மெல்ல குறையத் தொடங்கியது.

தூத்துக்குடி மாவட்டத்திலும் மழை குறைந்துள்ளது.

காயல்பட்டினம், திருச்செந்தூர், ஸ்ரீவைகுண்டம் பகுதிகளில்  ஒரு வாரமாக பலத்த மழை பெய்த நிலையில் கடந்த இரு தினங்களாக மழை குறைந்தது. நெல்லை, தூத்துக்குடி, தென்காசி மாவட்டங்களில்  மக்களின் இயல்பு வாழ்க்கை நேற்று மீண்டும் தொடங்கியது. நெல்லை அருகே மேலநத்தம் மற்றும் சீவலப்பேரி பாலங்களில் தடைப்பட்டிருந்த வாகன போக்குவரத்து நேற்று மீண்டும் தொடங்கியது. தீவுகளாக மாறிய  3 கிராமங்கள்: நெல்லை மாவட்டத்தில் மழை வெள்ளம் நேற்று குறைந்தபோதும் கடந்த ஒரு வாரமாக 3 கிராமங்கள் தீவுகளாக தவித்து வருகின்றன.

முனைஞ்சிப்பட்டி காடன்குளம் அருகே கழுவூர், மாங்குளம், பாப்பங்குளம் உள்ளிட்ட 3 கிராமங்களிலும் வெள்ளநீர் சுற்றிலும் தேங்கியது. மணிமுத்தாறு 80 அடி கால்வாயில் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கு காடன்குளம் பாலத்தை மூழ்கடித்துச் சென்றது. 3 கிராம மக்களும் காடன்குளம் பாலத்தை தாண்டினால் தான் அனைத்து பணிகளுக்கும் வெளியேற முடியும். தரைப்பாலத்தில் தண்ணீர் வரத்து இன்னமும் குறையாததால், 3 கிராமங்களும் தீவுகளாக துண்டிக்கப்பட்ட நிலையில் உள்ளன. காடன்குளம் வேளாண் கூட்டுறவு சங்கத்திற்கு சென்று உரம், விதைகள் வாங்க முடியாமலும், பள்ளி குழந்தைகள் முனைஞ்சிப்பட்டி பள்ளிக்கு செல்ல முடியாமலும் தவிப்பதாக கிராம மக்கள் தெரிவித்தனர்.

24 ஆண்டுகளுக்குப் பிறகு திருமூர்த்தி அணையில் உபரிநீர் திறப்பு

உடுமலை: திருப்பூர் மாவட்டம் உடுமலை அருகே 60 அடி உயரம் கொண்ட திருமூர்த்தி அணை உள்ளது.  நேற்று அணையின் நீர்மட்டம் 57.83 அடியாக உயர்ந்தது. 1100 கன அடிக்கு மேல் நீர்வரத்து இருந்தது. இதையடுத்து, பாதுகாப்பு கருதி நேற்று மதியம் 2 மணிக்கு திருமூர்த்தி அணையில் இருந்து பாலாற்றில் உபரிநீர் வினாடிக்கு 150 கன அடி திறந்துவிடப்பட்டது. திருமூர்த்தி அணையில் இருந்து, கடந்த 1997ல் முதன்முறையாக உபரிநீர் திறக்கப்பட்டது. அதன்பிறகு 24 ஆண்டுகளுக்கு பிறகு நேற்று உபரிநீர் திறக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

Related Stories:

More