ரயில் மோதல், விஷம், மின்சாரம் தாக்கியதில் 10 ஆண்டில் 1,160 யானைகள் சாவு: ஆர்டிஐயில் அதிர்ச்சி தகவல்

மதுரை: தென்காசி மாவட்டம், பாவூர்சத்திரத்தை சேர்ந்த சமூக ஆர்வலர் பாண்டியராஜா, தகவல் அறியும் உரிமைச்சட்டத்தின் மூலம், யானைகள் குறித்து கேட்ட கேள்விகளுக்கு ஒன்றிய யானைகள் திட்ட வல்லுநர் மற்றும்  தலைமை பொது தகவல் அலுவலர் முத்தமிழ்ச்செல்வன் பதிலளித்துள்ளார். அதன் விபரம் வருமாறு:  2020 வரை கடந்த 10 ஆண்டுகளில் 186 யானைகள் ரயில் மோதி இறந்துள்ளன. அதிகபட்சமாக அசாம் மாநிலத்தில் 62 யானைகள் இறந்துள்ளன. தமிழகத்தில் 5  யானைகள் இறந்துள்ளன.

இதே 10 ஆண்டுகளில் மின்சாரம் தாக்கி 741 யானைகள் இறந்துள்ளன.  அதிகபட்சமாக ஒடிசா மாநிலத்தில் 133, தமிழகத்தில் 93  யானைகள் இறந்துள்ளன. இதே காலகட்டத்தில் வேட்டையாடப்பட்டு இறந்த யானைகளின் எண்ணிக்கை 169. இதில் அதிகபட்சமாக ஒரிசாவில் 49, தமிழகத்தில் 9 யானைகள் வேட்டையாடப்பட்டுள்ளன. இந்த காலக்கட்டத்தில் விஷம் வைத்து 64 யானைகள் கொல்லப்பட்டுள்ளன. மொத்தமாக கடந்த 10 ஆண்டுகளில் 1,160 யானைகள் கொல்லப்பட்டுள்ளன.

 கடந்த 2017ம் ஆண்டு நடத்தப்பட்ட கணக்கீட்டின்படி இந்தியா முழுவதும் 29,964 யானைகள் இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அதிகபட்சமாக கர்நாடக மாநிலத்தில் 6,049, அசாம் மாநிலத்தில் 5,719, கேரளாவில் 5,706, தமிழகத்தில் 2,761  யானைகள் உள்ளதாக அந்த கணக்கீடு தெரிவிக்கிறது.  யானைகளை பாதுகாப்பதற்காக யானைகள் திட்டம் மூலம் கடந்த 10 ஆண்டுகளில் ரூ.212.5 கோடி செலவிடப்பட்டுள்ளது மற்றும் யானைகளை பாதுகாக்க பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளது இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related Stories:

More