கிருஷ்ணகிரி மாவட்ட கலெக்டர் அதிரடி: தடுப்பூசி போடாதவர்கள் பொது இடங்களுக்கு செல்ல தடை

கிருஷ்ணகிரி: கிருஷ்ணகிரி மாவட்டத்தில் கொரோனா தடுப்பூசி செலுத்திக்கொள்ளாதவர்கள், பொது இடங்களுக்கு செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளதாக கலெக்டர் ஜெயசந்திரபானு ரெட்டி தெரிவித்தார். இதுகுறித்து அவர் நேற்று கூறியதாவது: கிருஷ்ணகிரி மாவட்டத்தில், அரசின் வழிகாட்டு நெறிமுறைகளை பொதுமக்கள் முறையாக கடைபிடித்ததால், தற்போது தினசரி கொரோனா பாதிப்பு 10க்கும் குறைவாக உள்ளது. கொரோனா வைரஸ் உருமாறி ஒமிக்ரான் என்ற புதிய வகை வைரஸ், ஒருசில நாடுகளில் பரவுவதாக தகவல் வந்துள்ளது.

இம்மாவட்டத்தில் 18 வயதிற்கு மேற்பட்ட 15 லட்சத்து 2 ஆயிரம் பேர் கொரோனா தடுப்பூசி செலுத்திக் கொள்ள தகுதியானவர்கள். இதில், 10 லட்சத்து 86 ஆயிரத்து 500 பேர் முதல் தவணை கொரோனா தடுப்பூசியை செலுத்தியுள்ளனர். தமிழக அரசு கொரோனா தடுப்பூசி செலுத்திக் கொள்ளாதவர்கள், பொது இடங்களுக்கு செல்ல தடை விதித்துள்ளது. அதன்படி, கிருஷ்ணகிரி மாவட்டத்தில் இதுவரை கொரோனா தடுப்பூசி செலுத்திக் கொள்ளாத  4 லட்சத்து 20 ஆயிரம் பேர், 2ம் தேதி(இன்று) முதல் ரேஷன் கடைகள், வியாபார நிறுவனங்கள், சூப்பர் மார்க்கெட்,

திரையரங்கம், திருமண மண்டபம், பெட்ரோல் விற்பனை நிலையங்கள், தனியார் மற்றும் அரசு மருத்துவமனைகள், அரசு, தனியார் அலுவலகங்கள், பள்ளி, கல்லூரிகள், விளையாட்டு மைதானங்கள், துணி கடைகள், கடை வீதிகள், ஓட்டல்கள், தங்கும் விடுதிகள், டீ கடைகள், வங்கிகள் போன்ற இடங்களுக்கு செல்ல தடை விதிக்கப்படுகிறது. இந்த விதிமுறைகளை பின்பற்றாத பொதுமக்கள் மற்றும் நிறுவன உரிமையாளர்கள் மீது, தகுந்த நடவடிக்கை எடுக்கப்படும் என்றார்.

Related Stories:

More