தந்தை இறுதி சடங்கில் கலந்து கொள்ள பெங்களூருவில் இருந்து புதுக்கோட்டைக்கு ஹெலிகாப்டரில் வந்த ‘பாசமகன்’

புதுக்கோட்டை: புதுக்கோட்டை மாவட்டம் தென்னங்குடி ஊராட்சி மன்ற தலைவராக இருந்தவர் சுப்பையா (72). இவரது மகன் சசிகுமார். திருப்பூரில் கம்பெனி வைத்து நடத்தி வரும் இவர், கம்பெனி வேலை நிமித்தமாக இந்தோனிஷியா சென்றிருந்தார். இந்நிலையில், கடந்த மாதம் 30ம்தேதி தந்தை சுப்பையா உடல் நலக்குறைவால் இறந்து விட்டதாக சசிகுமாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. இதைத்தொடர்ந்து, இந்தோனிஷியாவில் இருந்து விமானம் மூலம் சசிகுமார் துபாய் வந்தார். பின்னர் அங்கிருந்து பெங்களூருக்கு நேற்று வந்தார். இதனைத்தொடர்ந்து அங்கிருந்து புதுக்கோட்டை மாவட்டம் தென்னங்குடிக்கு சாலை மார்க்கமாக வந்தால் காலதாமதம் ஏற்படும் என்பதால் பெங்களூரிலிருந்து ரூ.5லட்சத்தில் வாடகைக்கு தனியார் ஹெலிகாப்டர் மூலம் புதுக்கோட்டைக்கு நேற்று வந்தார்.

பின்னர் புதுக்கோட்டை ஆயுதப்படை மைதானத்தில் இருந்து கார் மூலம் சாலை மார்க்கமாக சொந்த ஊரான தென்னங்குடிக்கு சென்றார். அங்கு தந்தையின் இறுதி சடங்கில் சசிகுமார் கலந்து கொண்டார். இதனைத்தொடர்ந்து நேற்று மாலை ஹெலிகாப்டர் பெங்களூருக்கு புறப்படுவதற்கு தயாராக இருந்த நிலையில் வானிலை காரணமாக, ஹெலிகாப்டர் புறப்படுவதில் திடீர் சிக்கல் ஏற்பட்டது. இதையடுத்து, ஹெலிகாப்டர் பைலட் மற்றும் உதவியாளர் ஆகியோர் புதுக்கோட்டையில் உள்ள நட்சத்திர ஓட்டலில் தங்க வைக்கப்பட்டனர்.  இந்நிலையில் வானிலை சரியானதும் இன்று (2ம்தேதி) காலை ஹெலிகாப்டர் பெங்களூருக்கு புறப்பட்டு செல்லும் என கூறப்படுகிறது.

Related Stories:

More